ரியல் எஸ்டேட் அதிபர் லாரி மோதி பலி
கரூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் லாரி மோதி பலியானார். தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வெள்ளியணை,
ரியல் எஸ்டேட் அதிபர்
சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோடு பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் பொகாரியா (வயது 52). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் தொழில் சம்பந்தமாக ஏற்காடு சென்றுவிட்டு கன்னியாகுமரிக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
கரூர் அருகே சடையப்பகவுண்டன் புதூர் பகுதியில் வந்தபோது டீ குடிப்பதற்காக தனது காரை நிறுத்தினார். அதன்பின்னர் டீ குடித்துவிட்டு காரில் ஏற கதவை திறந்தபோது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக சஞ்சய் பொகாரியா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
டிரைவருக்கு வலைவீச்சு
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சஞ்சய் பொகாரியா ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.