வெயில் கொளுத்தி வந்த நிலையில் மாவட்டத்தில் திடீர் மழை அதிகபட்சமாக குறிஞ்சிப்பாடியில் 53 மில்லி மீட்டர் பதிவு

வெயில் கொளுத்தி வந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் திடீரென மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக குறிஞ்சிப்பாடியில் 53 மில்லி மீட்டர் மழை பதிவானது.

Update: 2022-04-10 18:06 GMT

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. 95 டிகிரியை தாண்டி வெயில் அடித்தாலும், அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் பொதுமக்கள் தவியாய் தவித்து வருகின்றனர். இந்த வெயிலின் தாக்கம் காரணமாக பகலில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. இரவு நேரங்களில் தூங்க முடியாமலும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
 இதற்கு மின்தடையும் ஒரு காரணமாக இருந்து வருகிறது.


இந்நிலையில் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக -வட இலங்கை கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள், டெல்டா, கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

மழை

அதன்படி கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு, விட்டு அதிகாலை வரை பெய்தது. சில இடங்களில் கன மழையாக பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதை பார்க்க முடிந்தது. 

குறிப்பாக குறிஞ்சிப்பாடி, வடக்குத்து, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், குப்பநத்தம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

இருப்பினும் இந்த மழை கோடை வெயிலில் சிரமப்பட்டு வந்த மக்களுக்கு சற்று ஆறுதலை தந்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குறிஞ்சிப்பாடியில் 53 மில்லி மீட்டர் மழை பதிவானது. குறைந்தபட்சமாக கீழசெருவாயில் 1 மில்லி மீட்டர் மழை பதிவானது.

மேலும் செய்திகள்