செவிலியரிடம் ஆன்லைனில் ரூ.1¼ லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

செவிலியரிடம் ஆன்லைனில் ரூ.1¼ லட்சம் மோசடி செய்த மர்மநபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-04-10 17:51 GMT
புதுக்கோட்டை:
ரூ.1¼ லட்சம் மோசடி
புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகே அரசர்குளத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி (வயது 27). இவர் 108 ஆம்புலன்சில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அகிலாண்டேஸ்வரியின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. இதனை கிளிக் செய்ததில் ஆன்லைனில் வணிகம் செய்வது தொடர்பாக மர்மநபர் வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். 
அப்போது வாட்ஸ்-அப், டெலிகிராம் குழுவில் இணைந்து வணிகம் செய்வது தொடர்பாக மர்மநபர் எடுத்துரைத்துள்ளார். மேலும் வணிகம் தொடங்குவதற்கு பணம் கேட்டுள்ளார். இதனை நம்பிய அகிலாண்டேஸ்வரி பணத்தை கூகுள் பே, போன் பே மூலம் வெவ்வேறு தவணைகளாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 900 வரை கொடுத்துள்ளார்.
போலீசார் விசாரணை
இந்த நிலையில் பணத்தை பெற்ற பின் வணிகம் தொடங்குவது பற்றி எதுவும் தெரிவிக்காமல் மர்மநபர் மோசடி செய்தார். இதனால் தன்னிடம் ஆன்லைன் மூலம் பணம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அகிலாண்டேஸ்வரி புகார் அளித்தார். 
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆன்லைன் வணிகம் தொடர்பாக செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்தால் பொதுமக்கள் தவிர்த்துவிடுமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்