அதிக மகசூல் பெற மண் பரிசோதனை செய்து பயிர்களுக்கு உரமிட வேண்டும்-வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்

விவசாயிகள் அதிக மகசூல் பெற மண் பரிசோதனை செய்து உரமிட வேண்டும் என்று நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அன்புச்செல்வி தெரிவித்து உள்ளார்.

Update: 2022-04-10 17:37 GMT
நாமக்கல்:
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மண் பரிசோதனை
பயிரின் வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவைகளாக மண் வளமும், நீர் வளமும் உள்ளது. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் களை கொல்லிகளை அதிகமான அளவில் உபயோகப்படுத்துவதால் மண்ணின் வளம் மற்றும் பயிர்களின் சாகுபடி பாதிக்கப்படுவதோடு விவசாய விளை பொருட்களின் தரமும் பாதிக்கப்படுகிறது. எனவே மண் வளத்தை பாதுகாக்கவும், சீர் செய்யவும் மண் பரிசோதனை மிகவும் அவசியமாகும்.
மண் பரிசோதனை செய்வதால் மண்ணின் தன்மை, சுண்ணாம்பு நிலை, உப்பின் நிலை, அமில மற்றும் கார நிலை, பேரூட்ட சத்துகளான தழை, மணி, சாம்பல் சத்துகளின் அளவையும், நுண்ணூட்ட சத்துகளான இரும்பு, துத்தநாகம், மேக்னீசு மற்றும் தாமிர சத்துகளின் அளவை அறிந்து கொள்ள முடியும். களர், உவர் மற்றும் அமில நிலங்களை கண்டறிந்து அவற்றை சீர்திருத்தம் செய்யவும், பயிருக்கு ஏற்ப சமச்சீர் உர பரிந்துரை வழங்கவும் மண் பரிசோதனை அவசியமாகிறது.
மண்வள அட்டை
நாமக்கல் அருகே உள்ள வசந்தபுரத்தில் மண்பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் மண்வள அட்டை திட்டத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மண் மற்றும் நீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு ஆய்வு முடிவுகள் மண்வள அட்டை வடிவில் வழங்கப்படுகிறது.
மண்வள அட்டையில் சமச்சீர், உரப்பரிந்துரைகள், களர், உவர், அமில மற்றும் சுண்ணாம்பு நிலைகளுக்கான சீர்திருத்த பரிந்துரைகள் இயற்கை மற்றும் நுண்ணுயிர் உரப்பரிந்துரைகள் மற்றும் நுண்ணூட்ட சத்து பரிந்துரைகள் வழங்கப்படுகிறது. இங்கு மண்மாதிரி ஆய்வுக்கு ரூ.20 மற்றும் பாசனநீர் ஆய்வு கட்டணமாக ரூ.20 பெறப்படுகிறது.
விவசாயிகளுக்கு நுண்ணுயிர் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு மானிய விலையில் வழங்கப்படுகிறது. நுண்ணுயிர் உரங்களை விதை நேர்த்தி செய்தோ, வேரில் நனைத்தோ அல்லது மண்ணில் இடும்போது பயிர்களுக்கு பேரூட்ட சத்துகள் கிடைக்க செய்து பயிர் விளைச்சலை 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்கிறது.
அதிக மகசூல்
இது போன்றே நுண்ணூட்ட உரங்களையும் இடுவதன் மூலம் பயிர்களுக்கு தேவையான சத்துகள் மட்டுமின்றி பூ உதிர்வதை தடுத்து மகசூலை அதிகரிக்கின்றது. எனவே விவசாயிகள் மண் ஆய்வு செய்து மண்வள அட்டையின் பரிந்துரையின்படி உரமிட்டு ரசாயன உரங்களை குறைத்து திட மற்றும் திரவ உயிர் உரங்கள், அங்கக உரங்களை பயன்படுத்தி மண் வளம் காத்து அதிக மகசூல் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்