நாமக்கல்லில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலம்

நாமக்கல்லில் நேற்று குருத்தோலை ஞாயிறையொட்டி கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.;

Update: 2022-04-10 17:37 GMT
நாமக்கல்:
குருத்தோலை ஞாயிறு
இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாகவும், அதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை குருத்தோலை ஞாயிறாகவும் கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். சிலுவையில் அறையப்படும் முன்பு ஜெருசலேம் நகருக்கு இயேசு கிறிஸ்து கோவேறு கழுதையில் ஊர்வலமாக வந்தார்.
அப்போது அங்கிருந்தவர்கள் தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா என பாடல்கள் பாடியவாறு அவரை வரவேற்றனர். மேலும் கைகளில் குருத்தோலைகள், மரக்கிளைகளை பிடித்தவாறும், தரையில் துணிகளை விரித்தும் அவரை மகிமைபடுத்தினர். இந்த நாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குருத்தோலை ஞாயிறு அன்று கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக செல்வது வழக்கம். 
சிறப்பு பிரார்த்தனை
அந்த வகையில் நேற்று நாமக்கல் கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பங்குதந்தை ஜான் அல்போன்ஸ் தலைமை தாங்கினார். பங்குதந்தை செபாஸ்டின் முன்னிலை வகித்தார்.
தேவாலய வளாகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் துறையூர் சாலை, திருச்சி சாலை வழியாக சென்று மீண்டும் தேவாலயத்தை அடைந்தது. பின்னர் அங்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
ராசிபுரம்
ராசிபுரத்தில் உள்ள தூய லூர்து அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. அப்போது பங்கு தந்தை ஜெயசீலன் குருத்தோலைகளை மந்திரித்தார். கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி கொண்டு ஊர்வலமாக சென்றனர். பழைய பஸ் நிலைய பகுதியில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக தூய லூர்து அன்னை ஆலயத்தில் முடிவடைந்தது. பின்னர் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. 
இதேபோல் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், நாமகிரிப்பேட்டை உள்பட நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று குருத்தோலை ஞாயிறையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்