மத்திய அரசின் இந்தி திணிப்பு கண்டிக்கத்தக்கது.தொல் திருமாவளவன் பேச்சு
மத்திய அரசின் இந்தி திணிப்பு கண்டிக்கத்தக்கது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
அணைக்கட்டு
மத்திய அரசின் இந்தி திணிப்பு கண்டிக்கத்தக்கது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
இணையும் விழா
பல்வேறு மாற்றுக் கட்சியை சேர்ந்த சுமார் 1,500 பேர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணையும் விழா வேலூர் அடுத்த பொய்கையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு நடந்தது. நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் நீலம் சந்திரகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் இளங்கோவன் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது:-
இந்தி திணிப்பு
பாராளுமன்ற கூட்டத் தொடரில் அமித்ஷாவின் துறைசார்பில் கிரிமினல் தொடர்பான விவாதம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதன்மூலம் சாதாரண வழக்குகளில் கைது செய்யக்படக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய அடையாளங்கள் அனைத்தையும் ஆவணபடுத்தவேண்டும் எனகிற சட்ட திருத்தம் கொண்டுவரப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது. தனிநபரின் சுதந்திரம் பறிக்கப்படும் நிலை உருவாகிறது. இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இதை விடுதலை சிறுத்தை கட்சி கடுமையாகவும், வன்மையாகவும் கண்டிக்கிறது.
பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால் இதை சட்டம் ஆக்கிவிட்டார்கள். இதை அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பா.ஜ.க. நாடு முழுவதும் இந்தியை திணிக்க முயற்சித்து வருகிறது. இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் பேசுவதற்கு மாற்றாக இந்தியை பயன்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டதாக அமித்ஷா கூறிவருகிறார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 22 மொழிகள் உள்ளன. இதில் தமிழ் மொழியும், இந்தியும் உள்ளது.
கண்டனம்
இருந்தாலும் மாநிலங்களில் அனைத்து கோப்புகளும் இந்தியில் வைக்க வேண்டும் எனக் கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு என்பது 100 சதவீதம் உயர்த்தினால் தான் மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு நிதியை பெற இயலும் என அமைச்சர் நேரு விளக்கம் அளித்துள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் மக்களை குழப்புவதே மத்திய அரசின் தொடர் செயலாக உள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்த்து காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட அனைத்து மாநில கட்சிகளும், தமிழ்நாட்டை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு தி.மு.க.வின் கொள்கையை பின்பற்ற வேண்டும் என்ற சீதாராம்யெச்சூரியன் கருத்து வரவேற்கத்தக்கது. மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முழுக்கமுழுக்க மோடி அரசுதான் காரணம். இன்னும் கூட எண்ணெய் நிறுவனங்கள் வரிச்சுமையை குறைக்காததற்கு காரணம் மத்திய அரசுதான். இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை நோக்கி வருகின்ற தமிழ் சொந்தங்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றிற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.