விவசாயியிடம் ரூ.14 லட்சம் மோசடி
பரமக்குடி விவசாயியிடம் ரூ.14 லட்சம் மோசடி பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கொழுந்துறை கிழக்கு பகுதியை சேர்ந்த முத்துக்கருப்பன் மகன் செந்தில்குமரன் (வயது43). இவர் 10-ம் வகுப்புவரை படித்துவிட்டு சவுதி அரேபியாவில் எலக்ட்ரீசியனாக 2 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இதன்பின்னர் சொந்த ஊர் திரும்பி தற்போது விவசாயம் செய்து வருகிறார்.
இந்தநிலையில் செந்தில்குமரன் சவுதி நாட்டில் வேலை செய்தபோது வேலைவாய்ப்பிற்காக பல வேலைதரும் நிறுவனங்களில் தனது விவரங்களை பதிவு செய்திருந்தார். இந்தநிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவரின் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்-அப்பில் வந்த தகவலில் பிரபல நிறுவனத்தின் சார்பில் துபாய் விமானநிலையத்தில் எலக்ட்ரிக்கல் மேற்பார்வையாளர் பணிக்கு ஆள் எடுப்பதாகவும் தங்களின் விவரங்கள் தகுதியானதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு மகிழ்ந்த செந்தில்குமரன் பதிவு கட்டணம், விசா நடைமுறை கட்டணம், வைப்புத்தொகை போன்றவற்றை செலுத்த வேண்டும் என்று கூறியதால் பல தவணைகளாக மொத்தம் ரூ.14 லட்சத்து 40ஆயிரத்து 521 பணத்தினை வங்கியின் மூலம் அனுப்பி வைத்துள்ளார். பணம் முழுவதும் கொடுத்த பின்னரும் வேலை தரவில்லையே என்று சந்தேகமடைந்த செந்தில்குமரன் அந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது பதில் இல்லை.பின்னர் இதுகுறித்து சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன்படி ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ் பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.