குடிமங்கலம் பகுதியில் தனிப்பயிராக இலவம்பஞ்சு சாகுபடி

குடிமங்கலம் பகுதியில் தனிப்பயிராக இலவம்பஞ்சு சாகுபடி

Update: 2022-04-10 17:27 GMT
போடிப்பட்டி
குடிமங்கலம் பகுதியில் தனிப்பயிராக இலவம்பஞ்சு சாகுபடி செய்து விவசாயிகள் அதிக வருவாய் ஈட்டி வருகின்றனர்.
மகத்தான வருவாய்
விலை குறைவால் சாலையில் கொட்டப்படும் தக்காளி.தொடர் விலை சரிவால் வெங்காயத்தை வீதியில் கொட்டி ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்திய விவசாயிகள், உரம், மருந்து விலை உயர்வைக்கட்டுப்படுத்தக்கோரிக்கை, தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கும் விவசாயிகள் என்று தினசரி விவசாயிகள் சந்திக்கும் ஏராளமான பிரச்சினைகளைப் பார்க்கிறோம். இத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் தேவைக்கு அதிகமான பரப்பளவில் ஒரே பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, வரத்து அதிகரிப்பது முக்கிய காரணமாக உள்ளது. மேலும் அதிக பராமரிப்பு தேவைப்படும் உயர் விளைச்சல் ரகங்களைத்தேர்வு செய்து நடவு செய்வது மற்றொரு காரணமாகப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மாற்றி யோசிப்பதன் மூலம் மகத்தான வருவாய் ஈட்ட முடியும் என்ற அடிப்படையில் குடிமங்கலம் பகுதியில் தனிப்பயிராக இலவம்பஞ்சு சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பயிர் தேர்வு
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
உடுமலை, குடிமங்கலம் பகுதிகளில் காய்கறிப்பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் அடிக்கடி விலை குறைவால் விவசாயிகள் நஷ்டமடையும் நிலை உள்ளது. விவசாயத்தில் வெற்றி பெறுவதில் சூழ்நிலைக்கு ஏற்ப பயிர் தேர்வு முக்கிய இடம் பிடிக்கிறது. எனவே பராமரிப்பு குறைவான, குறைந்த அளவிலேயே சாகுபடி செய்யப்பட்டு வரும் இலவம்பஞ்சு சாகுபடியை தேர்வு செய்துள்ளோம். நீண்ட காலப்பயிரான இலவம் மரத்தில் காய், விதை, பஞ்சு, காயின் மேல் தோல், மரம் என அனைத்தும் பயன் தரக்கூடியது. அனைத்து விதமான மண்வகைகள் மற்றும் பருவநிலைகளிலும் வளரக் கூடியது. 
இதில் நாட்டு இலவு, கல் இலவு, செவ்விலவு என 3 வகைகள் உள்ளது.நாட்டு இலவு காய்கள் சிறியதாகவும், பஞ்சு பழுப்பு நிறமாகவும், அதிக விதைகள் உடையதாகவும் இருக்கும். அத்துடன் காய்கள் முதிர்ந்து விட்டால் விரைவில் வெடித்து பஞ்சு காற்றில் பறந்து விடும். அதேநேரத்தில் செவ்விலவைப் பொறுத்தவரை காய்கள் பெரியதாகவும், பஞ்சு நன்கு வெண்மை நிறமாகவும், குறைந்த அளவில் விதைகள் கொண்டதாகவும் இருக்கும். மேலும் எளிதில் வெடித்து பஞ்சு காற்றில் பறப்பதில்லை. எனவே பெரும்பாலான விவசாயிகளின் தேர்வாக செவ்விலவே உள்ளது.
மெத்தை உற்பத்தி
இலவம் மரங்கள் காற்றிலுள்ள ஈரப்பதத்தை எடுத்துக்கொண்டு வளரும் தன்மை உடையவை. அதனால் நடவு செய்து ஒரு ஆண்டு கடந்த பிறகு கோடை காலத்தில் மட்டும் தண்ணீர் பாய்ச்சினால் போதுமானதாகும். இலவம் மரங்கள் 4 முதல் 5 ஆண்டுகளில் பலன் கொடுக்கத் தொடங்கும். இருந்தாலும் 8 ஆண்டுகளுக்குப் பிறகே முழுமையான காய்ப்புத்திறனை அடைகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் வரை இலவம் காய்களை அறுவடை செய்யலாம். ஒரு மரத்தில் 800 காய்கள் வரை கிடைக்கிறது. இந்த காய்களை வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கிச் செல்கிறார்கள். 
நூல் நூற்பதற்குப் பயன்படாத பஞ்சு என்றாலும் மெத்தைகள், தலையணைகள் உற்பத்தியில் இலவம்பஞ்சு முக்கிய இடம் பிடிக்கிறது. அதேநேரத்தில் குறைந்த பரப்பளவிலேயே சாகுபடி செய்யப்படுவதால் இலவம்பஞ்சுக்கு நல்ல விலை கிடைக்கிறது. எனவே விவசாயிகள் தனிப்பயிராக இலவம்பஞ்சு சாகுபடி செய்து நல்ல வருவாய் ஈட்டலாம். அவ்வாறு தனிப்பயிராக சாகுபடி செய்ய முடியாதவர்கள் வேலிப்பயிராக சாகுபடி செய்தால் பராமரிப்பு ஏதுமில்லாமலேயே ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவிலான வருவாய் பெற முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்