சிறப்பான பட்ஜெட்டை தி.மு.க. தாக்கல் செய்துள்ளதாக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேச்சு
சிறப்பான பட்ஜெட்டை தி.மு.க. தாக்கல் செய்துள்ளதாக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேசினார்
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில், தமிழக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட தி.மு.க. சார்பில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ஞான.இமயநாதன், இளையபெருமாள் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் முன்னிலை வைத்தனர். நகர செயலாளர் செல்வராஜ் வரவேற்று பேசினார். இதில் முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யுமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மற்றும் தலைமை கழக பேச்சாளர் இளந்தளிர் இளங்கோ ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
கஜானாவை காலி செய்த அ.தி.மு.க.
கூட்டத்தில் பழனிமாணிக்கம் எம்.பி. பேசியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த அ.தி.மு.க.. அரசு தமிழக அரசின் கஜானாவை காலி செய்துவிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில்கள் ஸ்தம்பித்து, வரி வருவாய் குறைந்து, கடன் வாங்கும் திறன்கூட இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. தற்போது பொறுப்பேற்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, ரூ.7 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்தி கடன் வாங்கும் சக்தியை உருவாக்கி, சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
மேலும், இந்தியாவிலேயே விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தமிழகத்தில்தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு மட்டும் ரூ.38 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, மற்ற மாநிலங்களைவிட 10 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆகும்.
நீட் தேர்வு ரத்து தீர்மானம்
பொதுவாக மாநில அரசு இயற்றும் தீர்மானங்களை கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இது அவரது ஜனநாயக கடமை. ஆனால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பவில்லை. இது தமிழக அரசை மட்டுமல்ல தமிழக மக்களையும் அவமானப்படுத்தும் செயலாகும். கவர்னர் என்பவர் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டும். மாநில அரசின் உணர்வுகளை பிரதிபலிப்பவராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சத்தியசீலன், அருள்செல்வன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி உமாமகேஸ்வரி, ஒன்றிய குழு தலைவி காமாட்சிமூர்த்தி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் நகரசபை துணைத்தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.