ராமேசுவரம்,
ராமேசுவரம் பகுதியில் 4-வது நாளாக நேற்றும் பலத்த மழை பெய்தது. நேற்று காலை 9 மணியில் இருந்து சுமார் 1½ மணி நேரத்திற்கு மேலாக தொடர்ச்சியாக பலத்த மழை பெய்தது. அதன் பின்னர் மாலை வரையிலும் இடைவிடாமல் தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. தொடர் மழையால் பஸ் நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பல இடங்களில் மழைநீர் அதிக அளவில் குளம் போல் தேங்கி நின்றது. இதேபோல் பாம்பன், தங்கச்சிமடம் பகுதியிலும் நேற்று பகலில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. ரோடு பாலத்தில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. கோடைகாலத்தில் ராமேசுவரம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக முழுமையாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை இருந்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.