விஷம் குடித்து பெண் தற்கொலை
தேவதானப்பட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜா முகமது (வயது 27). இவர், ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற போடியை சேர்ந்த வினிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் வினிதா போடியில் வசித்து வந்தார். கடந்த 4-ந்தேதி தேனி அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் வினிதா தனது கணவர் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அன்றைய தினம் ராஜா முகமது வீட்டுக்கு சென்று வினிதா தான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டதாக தெரிகிறது.
இதில் ராஜா முகமது, அவருடைய தாய் தல்லத் பேகம் ஆகியோருக்கும், வினிதாவுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த வினிதா தான் கொண்டு வந்த விஷத்தை கணவர் வீட்டு முன்பு நின்று குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வினிதா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா முகமது, அவருடைய தாய் தல்லத் பேகம் ஆகியோரை கைது செய்தனர்.