கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது.
பொறையாறு
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஈஸ்டர் பண்டிகை
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்று ஈஸ்டர். உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்காக ஏசு கிறிஸ்து பட்ட பாடுகளையும், உயிர்ப்பையும் நினைவு கூறும் வகையில், கிறிஸ்தவ மக்கள் 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இந்த நாட்களில் அசைவ உணவுகளை தவிர்த்து ஏசு கிறிஸ்துவுக்காக ஜெபம், கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏசு கிறிஸ்து உயிர்விட்ட நாள் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது. அந்தவகையில் வருகிற 15-ந் தேதி புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. உயிர்ப்பு பெருவிழா 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும், முன்னதாக குறுத்தோலை பவனியும் நடைபெற்றது. தரங்கம்பாடி பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க எருசலேம் ஆலயம், புனித சீயோன் ஆலயம், புனித ஜெபமாலை அன்னை ஆலயம், பொறையாறில் உள்ள பெத்லேகம் ஆலயம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று குருத்தோலை பவனி நடைபெற்றது. பவனியில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் கைகளில் ஓலைகளை ஏந்தி ஓசன்னா பாடல்களை பாடியபடி வந்தனர்.