தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கனிமொழி எம்.பி. வழங்கினார்
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1¼ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1¼ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.
நலத்திட்ட உதவி
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நரிக்குறவர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா (ஓட்டப்பிடாரம்), மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), ஊர்வசி அமிர்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு 500 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடியே 28 லட்சத்து 74 ஆயிரத்து 340 மதிப்பிலான மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்களையும், நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 52 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும் வழங்கி பேசினர்.
தன்னம்பிக்கை
விழாவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்டபோது நரிக்குறவர் இன மக்களுக்கு முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் மாவட்ட கலெக்டர் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். அத்துடன் விட்டு விடாமல், தொடர்ந்து அவர்கள் வாக்களிப்பதற்கான நடவடிக்கை உள்ளிட்ட ஒவ்வொரு உரிமையையும் பெற்றுக்கொடுத்து உள்ளார். அவருக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த சமூகத்தில் ஒதுக்கப்பட்ட, உரிமைகளுக்காக தொடர்ந்து போராடக் கூடியவர்களுக்காக பணியாற்றக்கூடியவர்கள் நமது அமைச்சர்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்-அமைச்சர் பதவி ஏற்ற உடன், தலைவர் கலைஞர் போன்று இந்த துறையை தனது நேரடி பார்வையில் வைத்துக் கொண்டு மாற்றுத்திறனாளிகளின் தேவையை அறிந்து கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார்.
வழிகாட்டியாக திகழும்
கடந்த 10 ஆண்டுகளாக நீங்கள் கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தி உள்ளீர்கள். தற்போது நீங்கள் எந்த போராட்டமும் இல்லாமல் உங்கள் எல்லா கோரிக்கைகளும் நிறைவேற்றக்கூடிய தி.மு.க. ஆட்சி நடக்கிறது.
தி.மு.க. ஆட்சி, உங்கள் உரிமைகளை தர வேண்டியது எங்கள் கடமை என்று புரிந்து கொண்டு செயல்படக்கூடிய ஆட்சியாக உள்ளது. பெண்கள் படிக்க வேண்டும். சமூகத்தில் அனைவருக்கும் திறமை உள்ளது. நமக்கு இருக்கும் தடைகளை உடைக்கக்கூடியது கல்வி. அந்த தன்னம்பிக்கையோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டும். மற்றவர்களுக்கு வழிகாட்டியாக திகழும் நிலையை நீங்கள் உருவாக்கி காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் கீதாஜீவன்
அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கப்படுகிறது. தகுதியான, தேவையான மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுகிறது. முதல்-அமைச்சர் பொறுப்பேற்றது முதல் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து தீர்வு கண்டு வருகிறார். தகுதி உள்ள அனைவருக்கும் உதவி உபகரணங்களை வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். ஆகையால் இந்த திட்டம் பற்றி அறியாதவர்களுக்கு எடுத்துக் கூறி, அரசின் திட்டங்களை பெற நீங்கள் உதவி செய்ய வேண்டும், என்றார்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது, யாரெல்லாம் நசுக்கப்பட்டு உள்ளார்களோ, ஒதுக்கப்பட்டு உள்ளார்களோ, அவர்களுக்கு தனி கவனம் செலுத்தியவர் கலைஞர் கருணாநிதி. பாதிக்கப்பட்டவர்களுக்கு, அந்த பாதிப்புகளை சரி செய்யும் வகையில் சட்டங்களை தந்து காப்பாற்றும் வகையில் கலைஞர் திகழ்ந்தார். அவரது வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். கனிமொழி எம்.பியும் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை பெற்று தருகிறார், என்றார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், தாசில்தார் ஜஸ்டின், ஆவின் தலைவர் சுரேஷ்குமார், சமூக நல ஆர்வலர் கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர், தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.