வேளாங்கண்ணி அருகே வீடுகள் மீது மோதி ஆம்னி பஸ் கவிழ்ந்தது; சிறுமி பலி
வேளாங்கண்ணி அருகே ஆந்திராவில் இருந்து சுற்றுலா வந்த ஆம்னி பஸ் வீடுகள் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிறுமி பரிதாபமாக இறந்தாள். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேளாங்கண்ணி:-
வேளாங்கண்ணி அருகே ஆந்திராவில் இருந்து சுற்றுலா வந்த ஆம்னி பஸ் வீடுகள் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிறுமி பரிதாபமாக இறந்தாள். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேளாங்கண்ணிக்கு சுற்றுலா
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர் நரசிம்மன். இவருடைய மகள் சாத்விகா (வயது7). இவர்கள் உள்பட 44 பேர் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்காக ஆம்னி பஸ்சில் கடந்த 8-ந் தேதி கடப்பாவில் இருந்து புறப்பட்டனர். பஸ்சை கடப்பா பகுதியை சேர்ந்த நிரஞ்சன் (39) என்பவர் ஓட்டினார். இவர்கள் நேற்று முன்தினம் நாகை மாவட்டம் நாகூரில் உள்ள ஆண்டவர் தர்காவில் வழிபாடு செய்தனர்.
அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு வேளாங்கண்ணி சென்று தங்கினர். நேற்று வேளாங்கண்ணியில் நடந்த குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றனர். பின்னர் நேற்று மதியம் அங்கிருந்து ராமநாதபுரம் புறப்பட்டு சென்றனர்.
பஸ் கவிழ்ந்தது
திருப்பூண்டி அருகே காரைநகர் வந்த போது ஆம்னி பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கு உள்ள சம்பத்குமார் மற்றும் அவருடைய தம்பி சதீஷ்குமார் ஆகியோருடைய வீடுகளின் முன்பகுதி மீது மோதி தலைகீழாக கவிழ்ந்தது.
இதனால் பஸ்சில் வந்த அனைவரும் கூச்சலிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் அம்பிகாபதி தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் பஸ்சில் இருந்தவர்களை மீட்டனர்.
சிறுமி சாவு
இந்த விபத்தில் பஸ்சில் வந்த நரசிம்மன் மகள் சாத்விகா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானாள். மேலும் பஸ்சில் வந்த 10 பேர், வீட்டில் இருந்த சம்பத்குமார், சதீஷ்குமார் ஆகிய 2 பேர் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
பஸ் மோதியதில் வீடுகளும் சேதம் அடைந்தன. இதுகுறித்து கீழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.