தாயால் கொடுக்கப்பட்ட விஷ உணவை சாப்பிட்ட சிறுமி குணமடைந்து வீடு திரும்பினார்
தாயால் கொடுக்கப்பட்ட விஷ உணவை சாப்பிட்ட சிறுமி குணமடைந்து வீடு திரும்பினார்
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே உள்ள குளக்கச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 36), கொத்தனார். இவருடைய மனைவி கார்த்திகா (22). இவர்களுக்கு சஞ்சனா (4) என்ற மகளும், சரண் (1½) என்ற மகனும் உண்டு. இந்தநிலையில் கார்த்திகாவுக்கு மாராயபுரத்தை சேர்ந்த 25 வயது வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. கார்த்திகாவுக்கு திருமணம் ஆகி, குழந்தைகள் இருப்பது தெரிய வந்ததும். அந்த வாலிபர் விலக தொடங்கினார். ஆனால் கார்த்திகா தன்னை ஏற்று கொள்ளும்படி கெஞ்சி வந்தார். ஆனால் அதை வாலிபர் ஏற்க மறுத்தார்.
இதனால் தனது 2 குழந்தைகளையும் கொன்று விட்டால் கள்ளக்காதலன் ஏற்று கொள்வான் என்று கார்த்திகா நம்பினாள். அதைத்தொடர்ந்து தன்னுடைய 2 குழந்தைகளுக்கும் சேமியாவில் விஷம் கலந்து கார்த்திகா கொடுத்து உள்ளார். அதை சாப்பிட்ட சரண் பலியானான். சஞ்சனா மயங்கி விழுந்தார். ஆபத்தான நிலையில் இருந்த சஞ்சனாவை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்த பிறகு சஞ்சனா குணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து சிறுமி சஞ்சனா உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். சரணை கொலை செய்த வழக்கில் கார்த்திகாவை மார்த்தாண்டம் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி தக்கலை பெண்கள் கி்ளை சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.