கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த நகையை மீட்டு தருவதாக கூறி நூதன முறையில் பெண்ணிடம் நகை பறிப்பு
கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த நகையை கடன் தள்ளுபடி செய்து மீட்டு தருவதாக கூறி நூதன முறையில் பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
கடன் தள்ளுபடி செய்து
திருவள்ளூரை அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மனைவி சாந்தி (வயது 50). இவர் நேற்று முன்தினம் புன்னபாக்கத்தில் உள்ள தேவாலயத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் திருவள்ளூரை அடுத்த ஈக்காடு சாலையில் சென்று கொண்டிருந்தபோது மொபட்டில் வந்த இளம்பெண், சாந்தியிடம் நீங்கள் கூட்டுறவு வங்கியில் தங்க நகையை அடமானம் வைத்துள்ளீர்களா என கேட்டார். அதற்கு சாந்தி தான், நகை அடகு வைத்துள்ளதாக தெரிவித்தார்.
அதை தொடர்ந்து அந்த பெண் தான் கூட்டுறவு வங்கியில் இருந்து வருவதாகவும் அடகு வைத்த நகையை கடன் தள்ளுபடி செய்து மீட்டு் தருவதாக கூறி தன்னுடன் வங்கிக்கு வருமாறு மொபட்டில் அழைத்து சென்றார். சாந்தியும் சம்மதம் தெரிவித்து அவருடன் சென்றார்.
ஈக்காடு ஏரிக்கரை அருகே சென்றபோது மொபட்டை சாலையோரம் நிறுத்திய அந்த பெண் சாந்தியிடம் உங்களது கழுத்தில் உள்ள தங்கச்சங்கிலியை கொடுத்தால் அதனை வங்கிக்கு புகைப்படம் எடுத்து அனுப்பி உங்கள் நகை தானா என உறுதி செய்வதாக தெரிவித்தார்.
நகை பறிப்பு
இதை உண்மை என்று நம்பிய அவர் தன்னுடைய கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை கழற்றி அந்த பெண்ணிடம் கொடுத்தார். அந்த நகையை வாங்கி மேலும் கீழும் பார்த்த அந்த பெண் தன்னுடைய கழுத்தில் அணிந்து செல்பி எடுத்துக் கொண்டார்.
திடீரென அந்த பெண் தயாராக இருந்த தனது மொபட்டில் ஏறி நகையுடன் தப்பிச் சென்றுவிட்டார். இதனால் ஏமாற்றப்பட்ட சாந்தி அழுது கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் அந்த பெண்ணை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் போலீசார் ஈக்காடு பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகள் முன்பு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் தப்பிச் சென்ற பெண்ணின் உருவம் பதிவாகி உள்ளதா எனவும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.