குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி
குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நடந்தது. இதில் ஆயர்கள், பங்குமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
குழித்துறை,
குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நடந்தது. இதில் ஆயர்கள், பங்குமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
குருத்தோலை பவனி
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு அவரை மக்கள் அரசராக பாவித்து கோவேறு கழுதையின் மீது அமர்த்தி ஜெருசலேம் நகர வீதிகளில் பவனியாக அழைத்துச் சென்றனர். அப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒலிவமர கிளைகளை கைகளில் ஏந்தி ஓசான்னா பாடல் பாடி ஆர்ப்பரித்து சென்றனர்.
அதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை திருவிழாவாக கடைபிடித்து வருகிறார்கள். அன்றைய தினம் கிறிஸ்தவ ஆலயங்களில் பங்குமக்கள் குருத்தோலைகளை கைகளில் ஏந்தி பவனியாக செல்வார்கள். தொடர்ந்து சிறப்பு திருப்பலிகளும், ஆராதனைகளும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு குருத்தோலை பவனி நேற்று நடந்தது.
ஆயர்கள்
மார்த்தாண்டம் பகுதியில் உள்ள கத்தோலிக்க, சி.எஸ்.ஐ., லுத்தரன் சபை, ரட்சணிய சேனை ஆலயங்களில் குருத்தோலை பவனி, சிறப்பு திருப்பலி நடந்தது.
குழித்துறை மறை மாவட்ட தலைமை கத்தீட்ரல் பேராலயமான திருத்துவபுரம் மூவொரு இறைவன் பேராலயத்தில் நடந்த குருத்தோலை பவனி மற்றும் திருப்பலியில் மதுரை உயர் மறைமாவட்ட பேராயரும், குழித்துறை மறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகருமான பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமை தாங்கினார். மறை மாவட்ட செயலாளர் அருட்பணியாளர் ரசல் ராஜ், பேராலய பங்குத்தந்தை பீட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மார்த்தாண்டம் மறைமாவட்ட தலைமை ஆலயமான கிறிஸ்துராஜபுரம் கிறிஸ்துஅரசர் ஆலயத்தில் நடந்த குருத்தோலை பவனி மற்றும் திருப்பலியில் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமை தாங்கினார். பேராலய பங்கு தந்தை ஜோஸ் பிரைட் முன்னிலை வகித்தார்.
நல்லூர் கத்தோலிக்க ஆலயத்தில் நடைபெற்ற குருத்தோலை பவனியில் குழித்துறை மறை மாவட்ட தொடர்பாளர் அருட்பணியாளர் ஜேசுரெத்தினம் தலைமை தாங்கினார்.
சி.எஸ்.ஐ. ஆலயம்
மார்த்தாண்டம் சேகர சி.எஸ்.ஐ. ஆலயத்தில் போதகர் வெஸ்லின் கிறிஸ்டோபர் தங்கையா தலைமையில் குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு ஆராதனை நடந்தது.
விரிகோடு ஐக்கிய கிறிஸ்தவர்கள் சார்பில் நடைபெற்ற பவனியில் விரிகோடு சி.எஸ்.ஐ. ஆலயம், விரிகோடு இதயபுரம் இயேசுவின் திருஇருதய ஆலயம், விமலபுரம் அமலோற்பவ அன்னை ஆலயம், காரவிளை, வானியனாவிளை, ஞானபெத்தேல் சி.எஸ்.ஐ. ஆலயங்கள், நட்டாலம் ரட்சணிய சேனை உள்பட 10 கிறிஸ்தவ ஆலயங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதுபோல், வெட்டுமணி தூய அந்தோணியார் திருத்தல பங்கு, பாலவிளை கத்தோலிக்க ஆலயம், குழித்துறை மலங்கரை சிறியன் கத்தோலிக்க ஆலயம் உள்பட அனைத்து ஆலயங்களிலும் குருத்தோலை பவனி, சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சாமியார்மடம்
சாமியார்மடம் தூய யூதா ததேயு திருத்தலத்தில் நடந்த குருத்தோலை பவனியில் திருத்தல அதிபர் திவ்யானந்தம் தலைமை தாங்கினார். இணை பங்கு தந்தை ஆல்பிரட் குருத்தோலைகளை அர்ச்சித்தார். துணை பங்குதந்தையர்கள் ஜேம்ஸ், ஜெயசீலன், அருட்சகோதரிகள், பங்குமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பங்கு பேரவை துணைத் தலைவர் செல்வராஜ் நன்றி கூறினார்.
மாத்திரவிளை
மாத்திரவிளை புனித ஆரோபன அன்னை ஆலயத்தில் பங்குதந்தை ஜஸ்டின் பிரபு தலைமையில் குருத்தோலை பவனி நடந்தது. திருத்தொண்டர் ஜெனிஷ் முன்னிலை வகித்தார். இதில் மானான்விளை, திக்கணங்கோடு, அருளானந்தபுரம் போன்ற கிளை பங்குகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.
பேச்சிப்பாறை
பேச்சிப்பாறையில் புனித சூசையப்பர் ஆலயம் மற்றும் சி.எஸ்.ஐ. ஆலயம் ஆகியவை சார்பில் குருத்தோலை பவனி நடந்தது. சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை லூர்து தலைமை தாங்கினார். சி.எஸ்.ஐ. ஆலய போதகர் லிபின் ஜெபம் செய்தார். தொடர்ந்து சூசையப்பர் ஆலயத்தில் அருட்பணியாளர் பாலா கில்பர்ட் திருப்பலி நிறைவேற்றினார்.
குலசேகரம்
குலசேகரம் புனித அகுஸ்தினார் ஆலயத்தில் நடந்த குருத்தோலை பவனியில் பங்குத்தந்தை ஜோன்ஸ் கிளிட்டஸ் தலைமை தாங்கினார். பங்குபேரவை துணைத்தலைவர் ஜான்சன், செயலாளர் டெலரோஸ், பொருளாளர் மகேஷ் மற்றும் பங்குமக்கள் கலந்து கொண்டனர்.