கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு பவனி

ஊட்டி, கூடலூரில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு பவனி சென்றனர்.

Update: 2022-04-10 14:33 GMT
ஊட்டி

ஊட்டி, கூடலூரில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு பவனி சென்றனர்.

கிறிஸ்தவர்கள் தவக்காலம்

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டு உள்ளது. இந்த நாட்களை கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். இந்த ஆண்டு கடந்த மாதம் 2-ந் தேதி முதல் தவக்காலம் தொடங்கியது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் தினமும் காலை, மாலை சிறப்பு பிரார்த்தனை நடந்து வருகிறது. 

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு எருசலேமை நோக்கி கழுதை மேல் அமர்ந்து பவனியாக சென்றார். அப்போது எருசலேம் நகரை சுற்றிலும் குருத்தோலைகளை கையில் பிடித்தபடி பாடலை பாடியவாறு சென்றனர். இது தாழ்மையின் ரூபம் என்று பைபிள் கூறுகிறது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறாக அனுசரித்து வருகின்றனர். 

குருத்தோலை பவனி

அதன்படி இன்று நீலகிரி முழுவதும் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. ஊட்டி சி.எஸ்.ஐ. தூய திரித்துவ ஆலயத்தில் பங்கு குரு இம்மானுவேல் வேழவேந்தன் தலைமையில் குருத்தோலை ஞாயிறையொட்டி காலை 8 மணிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. பின்னர் ஆலயத்தில் இருந்து குருத்தோலை ஞாயிறு பவனி தொடங்கியது. ஸ்டேட் வங்கி, புளுமவுண்டன் சாலை, மெயின் பஜார், ராஜீவ்காந்தி ரவுண்டானா, மத்திய பஸ் நிலையம் வழியாக புனித தாமஸ் ஆலயம் வரை பவனி சென்றது. இதில் பங்கு தந்தை ஜெரேமியா ஆல்பிரட் மற்றும் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை குருத்தோலைகளை கையில் ஏந்தி பாடல்களை பாடியபடி சென்றனர். பின்னர் காலை 10.30 மணிக்கு தாமஸ் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. 

சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் பங்கு தந்தை ஸ்தனிஸ் பிரார்த்தனை செய்து குருத்தோலைகளை மந்திரித்து வழங்கினார். கிறிஸ்தவர்கள் ஆலய வளாகத்துக்குள் குருத்தோலைகளை ஏந்தி பவனியாக சென்றனர். பின்னர் திருப்பலி நடந்தது. இதேபோன்று சி.எஸ்.ஐ., ரோமன் கத்தோலிக்க ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

சிறப்பு பிரார்த்தனை

குன்னூர் சி.எஸ்.ஐ. யோவான் ஆலய போதகர் கிறிஸ்டோபர் சாம்ராஜ் தலைமையில் பெட்போர்டு சர்க்கிளில் இருந்து தொடங்கி மீண்டும் ஆலயக்கு கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தியவாறு பவனியாக வந்தனர். தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோன்று சி.எஸ்.ஐ. வெஸ்லி ஆலயம், கேட்டில்பவுண்டு புனித அந்திரேயா ஆலயம், நல்லப்பன் தெரு சி.எஸ்.ஐ. ஜோசப் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

கூடலூரில் புனித மரியன்னை ஆலயத்தில் பங்கு குருக்கள் ரெனால்டு பிரபு, சார்லஸ் பிரபு ஆகியோர் தலைமையில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. குழந்தை இயேசு, தூய யோவான் உள்பட கூடலூர் பகுதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு பவனி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது.

மேலும் செய்திகள்