தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதி கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி

தூத்துக்குடி, கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நேற்று நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-04-10 14:29 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி, கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நேற்று நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தவக்காலம்
கிறிஸ்தவ மக்கள் ஆண்டுதோறும் ஏசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தவக்காலம் கடந்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி சாம்பல் புதன் வழிபாட்டுடன் தொடங்கியது. தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை குருந்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. ஏசு கிறிஸ்து தனது சீடர்களுடன் ஜெருசலேம் நகருக்குள் நுழைந்த போது மக்கள் ஆலிவ் இலைகளை கையில் ஏந்தி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து உள்ளனர். அதனை நினைவு கூறும் வகையில் குருத்தோலை பவனி நடக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக கிறிஸ்தவ தேவாலயங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் குருத்தோலை பவனி நடந்தது. நேற்று கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு இருப்பதால் குருத்தோலை பவனி சிறப்பாக நடந்தது.
குருத்தோலை பவனி 
தூத்துக்குடி திரு இருதய பேராலயத்தில் (சின்னக்கோவில்) நடைபெற்ற குருத்தோலை பவனிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கினார். முன்னாள் பிஷப் இவோன் அம்புரோஸ் முன்னிலை வகித்தார். ஆலயத்தை சுற்றி முக்கிய வீதிகள் வழியாக பவனி நடந்தது. தொடர்ந்து பிஷப் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதே போன்று தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையில் குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு திருப்பலி நடந்தது.
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஆன்றனி புருனோ தலைமையிலும், தாளமுத்துநகர் மடுஜெபமாலை ஆலயத்தில் பங்குதந்தை நெல்சன்ராஜ் தலைமையிலும், ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கியநாதர் ஆலயத்தில் உதவி பங்குத்தந்தை பிபின் தலைமையிலும் குருத்தோலை பவனி நடந்தது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். இதே போன்று மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி, பிரார்த்தனை நடந்தது.
ஈஸ்டர்
தவக்காலத்தில் வரும் வாரம் முழுவதும் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) புனித வியாழனை முன்னிட்டு ஏசு கிறிஸ்து தமது சீடர்களின் பாதங்களை கழுவும் நிகழ்வை நினைவுகூறும் வகையில் பாதம் கழுவும் நிகழ்ச்சி கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நடக்கிறது. 15=ந் தேதி புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவை பாதை வழிபாடுகள் நடக்கிறது. 16-ந் தேதி நள்ளிரவு ஈஸ்டர் சிறப்பு வழிபாடுகளும், 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.
கோவில்பட்டி
கோவில்பட்டியில் கிறிஸ்தவ மக்களின் தவக்காலம் மார்ச் 2-ந்தேதி சாம்பல் புதன் அன்று தொடங்கியது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோவில்பட்டி புனித வளனார் ஆலயத்தில் சிலுவை பாதையும், திருப்பலியும், ஞாயிற்றுக் கிழமைகளில் பங்கு அளவில் நடை பயணமும், திருப்பயணமும் நடைபெற்றது.
நேற்று காலையில் புனித வளனார் ஆலய இறை மக்களும், தென் இந்திய திருச்சபை சி.எஸ்.ஐ.யும் இணைந்து குருத்தோலை பவனியை புனித வளனார் ஆலயத்திலிருந்து தொடங்கினர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கைகளில் குருத்தோலை ஏந்தி ஓசன்னா பாடியவாறு கலந்து கொண்டனர். ஊர்வலத்திற்கு புனித வளனார் ஆலய பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ், உதவி பங்குத்தந்தை செல்வின், தென்னிந்திய திருச்சபை சேகரகுரு தாமஸ், உதவி போதகர் ரூபன், கௌரவ குரு இமானுவேல் இணைந்து ஜெபம் செய்து குருத்தோலை ஊர்வலத்திற்கு தலைமை தாங்கினர்.  ஊர்வலம் மெயின் ரோடு, புதுரோடு, கடலையூர் ரோடு, மில் தெரு வழியாக புனித வளனார் ஆலயத்திற்கு வந்தடைந்தது. அங்கு திருப்பலி நடைபெற்றது.
கயத்தாறு
கயத்தாறில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு நேற்று கிறிஸ்தவர்கள் ஓசன்னா பாடலை பாடியவாறு கையில் குருத்தோலை ஏந்தி ஊர்வலம் சென்றனர். ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் இருந்து பங்குத்தந்தை வினாசென்ட் தலைமையில் ஏராளமான  ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர். இந்த ஊர்வலம் ஆஸ்பத்திரி சாலை, பழையகடம்பூர் சாலை, விமான சாலை, கோட்டை பிள்ளையார் கோவில் தெரு, வாரச்சந்தை சாலை உள்பட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக இந்த ஊர்வலம் நடைபெற்றது. லூர்து மாதா ஆலயத்தில் ஊர்வலம் நிறைவடைந்தது. லூர்து மாதா ஆலயத்தில் சிறப்பு சொற்பொழிவு ஆராதனை மற்றும் ஜெப வழிபாடுகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் அனைத்து கயத்தாறு அனைத்து ஆலய உபதேசியர்கள் மற்றும் செவிலியர்கள் விழா நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நெடுங்குளம்
சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தில் குருத்தோலை பவனி நடைபெற்றது. நெடுங்குளம் அந்தோணியார் ஆலயத்தில் இருந்து தொடங்கிய பவனியை பங்குத்தந்தை சேவியர் கிங்ஸ்டன் தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கைகளில் ஏந்தியவாறு ஓசன்னா பாடலை பாடியவாறு சென்றனர்.
ஆறுமுகநேரி
ஆறுமுகநேரி புனித சவேரியார் ஆலயத்தில் இருந்து நேற்று காலையில் குருத்தோலை பவனி புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. 
இந்த குருத்தோலை பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து புனித சவேரியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதனை ஆறுமுகநேரி பங்குத்தந்தை அலாய்சியஸ் அடிகளார், திருத்தொண்டர் கிங்ஸ்லி அடிகளார் ஆகியோர் நிறைவேற்றினர். 
இதேபோல் காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பர் ஆலயத்தில்  குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதேபோல் சிங்கித்துறை புனித செல்வமாதா ஆலயத்தில் குருத்தோலை பவனி மற்றும் திருப்பலிகள் நடைபெற்றன.மேலும் புன்னக்காயல் புனித ராஜகன்னி மாதா ஆலயத்தில் பங்குத்தந்தை பிராங்கிளின் அடிகளார் தலைமையில் குருத்தோலை பவனி மற்றும் குருத்தோலை திருப்பலி நடைபெற்றது.
குலையன்கரிசல்
குலையன்கரிசல் அபிஷேக நாதர் ஆலயத்தில் குருத்தோலை பண்டிகை விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று  சபை குரு ஹரிஸ் குருத்தோலை பவனியை தொடங்கி வைத்தார். குருத்தோலையை சபை மக்கள் கையில் ஏந்தி ஓசன்னா பாடலை பாடியவாறு ஊர்வலமாக சென்றனர்.

மேலும் செய்திகள்