அரக்கோணத்தில்ரூ.50 லட்சத்தில் பொழுதுபோக்கு பூங்கா. அமைச்சர் காந்தி திறந்துவைத்தார்
அரக்கோணத்தில் ரூ.50 லட்சத்தில் பொழுதுபோக்கு பூங்காவை அமைச்சர் காந்தி திறந்துவைத்தார்.
அரக்கோணம்
அரக்கோணம் நகராட்சி 4-வது வார்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அரக்கோணம் எம்.ஆர்.எப். நிறுவனம் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவினை பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் அரக்கோணம் எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பொழுதுபோக்கு பூங்கா அமைத்து கொடுத்துள்ளனர். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பூங்காவினை பொதுமக்களும், குழந்தைகளும் நல்ல முறையில் பயன்படுத்தி, பராமரிக்க வேண்டும். நகராட்சியும் இதனை முறையாக பராமரித்து எவ்வித சேதமும் ஏற்படாத வகையில் நல்ல ஒரு இயற்கை சூழலுடன் இருப்பதை தொடர்ந்து கண்காணித்து பராமரிக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். எம்.ஆர்.எப். நிறுவன பொது மேலாளர் ஜான் டேனியல், மக்கள் தொடர்பு அலுவலர் கஜேந்திரன், நிறுவனத்தின் தொழிற்சங்க பொது செயலாளர் சுரேஷ், தலைவர் ரமேஷ், பொருளார் கன்னையன், நகரமன்ற தலைவர் லட்சுமி பாரி, துணை தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ், நகராட்சி ஆணையாளர் லதா, வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ், தாசில்தார் பழனிராஜன், அரக்கோணம் ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா சவுந்தரராஜன், நகராட்சி பொறியாளர் ஆசிர்வாதம், அரக்கோணம் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.