குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம்; போராடி அகற்றிய தீயணைப்பு துறையினர்
குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை போராடி அகற்றிய தீயணைப்பு துறையினர் காயமின்றி மீட்டனர்.
சென்னை பாடி சத்யா நகரை சேர்ந்தவர் வினோத் ராஜ்-அனிதா தம்பதியினர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் 2-வது மகள் யாஷ்விதா(வயது 1½). குழந்தை நேற்று மாலை 5 மணி அளவில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது சில்வர் பாத்திரம் ஒன்றை தனது தலையில் தொப்பி போல் வைத்து விளையாடியபோது, திடீரென தலை பாத்திரத்திற்குள் சிக்கிக்கொண்டது.
இதனால் குழந்தை பயத்தில் அலற தொடங்கியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அனிதா இதுகுறித்து கொரட்டூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து அம்பத்தூர் தீயணைப்பு அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையிடம் லாவகமாக பேச்சுக்கொடுத்து தலையில் மாட்டியிருந்த பாத்திரத்தை எடுக்க முயன்றனர். பாத்திரத்தில் எண்ணெய் தடவியும் பாத்திரத்தை லேசாக வெட்டியும் போராடி 15 நிமிடத்தில் காயமின்றி மீட்டனர். பொறுமையுடன் அன்பாக பேசி லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு அனிதா கண்ணீர் மல்க நன்றி கூறி வழியனுப்பி வைத்தார்.