கடற்பாசி வளர்ப்பு பயிற்சி முகாம்

மீனவர் நலத்துறை சார்பில் கன்னியாகுமரியில் நடந்த கடற்பாசி வளர்ப்பு பயிற்சி முகாமை அமைச்சர் மனோ தங்கராஜ் தொங்கி வைத்தார்.;

Update: 2022-04-09 22:50 GMT
கன்னியாகுமரி:
மீனவர் நலத்துறை சார்பில் கன்னியாகுமரியில் நடந்த கடற்பாசி வளர்ப்பு பயிற்சி முகாமை அமைச்சர் மனோ தங்கராஜ் தொங்கி வைத்தார்.
பயிற்சி முகாம்
 குமரி மாவட்ட மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் மகளிர் திட்டத்தின் சார்பில் கன்னியாகுமரி ஸ்டெல்லா மேரிஸ் தொழிற்பயிற்சி மைய கலையரங்கத்தில் மகளிருக்கான கடற்பாசி வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
இதற்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.
 அப்போது அவர் கூறியதாவது:-
சுயதொழில் தொடங்க...
 தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொதுமக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குமரி மாவட்டத்தில் அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கு தொலைநோக்கு பார்வையில் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறோம். 
அதன்படி நமது மாவட்டத்தில் படித்து விட்டு வேலைவாய்ப்பின்றி இருக்கும் வாலிபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் முன்னேறுவதற்காக மீன்வளம், ரப்பர் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலை பயன்படுத்தி சுயதொழில் தொடங்குவதற்கு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறோம்.
முதல் கட்டமாக 
மேலும், நமது மாவட்டத்தை சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மீன் வளத்துறை மற்றும் மகளிர் திட்டம் இணைந்து பெண்களுக்கு கடற்பாசி தயாரிக்கும் பயிற்சியை தொடங்கி இிருக்கிறோம். இந்த பயிற்சி ஒரு தொடக்கமே. 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்த வேலையில்லாத வாலிபர்கள், பெண்கள் சுய தொழில் தொடங்குவதற்கும் அல்லது அவர்கள் ஒரு தொழிலை கற்றுக்கொண்டு அதன் வாயிலாக வேலைவாய்ப்பை பெறுவதற்கும் பல்வேறு இடங்களில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.  
முதல் கட்டமாக 50 மீனவ பயனாளிகளுக்கு கடற்பாசி வளர்ப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியில் கலந்து கொண்ட 50 பயனாளிகளுக்கு பிரதான் மந்திரி மத்சய சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் கடற்பாசி வளர்ப்புக்கான மிதவை தெப்பம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) மைக்கல் அந்தோணி பெர்ணாண்டோ, துணை இயக்குனர் (மீன்வளத்துறை) காசிநாதன் பாண்டியன், உதவி இயக்குனர்கள் (மீன்வளம்) மோகன்ராஜ், பிந்து, உதவி திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்