மதுரை சித்திரை திருவிழாவுக்கு 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

மதுரை சித்திரை திருவிழா பாதுகாப்பு பணியில் 4 ஆயிரம் போலீசாரும், தூய்மை பணியில் 1,500 ஊழியர்களும் ஈடுபடுகின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு, அமைச்சர்கள் ஆலோசனை வழங்கினர்.

Update: 2022-04-09 21:28 GMT
மதுரை, 

மதுரை சித்திரை திருவிழா பாதுகாப்பு பணியில் 4 ஆயிரம் போலீசாரும், தூய்மை பணியில் 1,500 ஊழியர்களும் ஈடுபடுகின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு, அமைச்சர்கள் ஆலோசனை வழங்கினர்.

ஆய்வுக்கூட்டம்

மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் அனிஷ் சேகர் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
மதுரை மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றான சித்திரை பெருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்புடன் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்திரை திருவிழா நடைபெறாமல் இருந்தது. கொரோனா தொற்றுப் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்தாண்டு சித்திரை திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணையதளத்தில்...

இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 14-ந் தேதியும், கள்ளழகர் எதிர்சேவை 15-ந் தேதியும், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் 16-ந் தேதியும் நடைபெற உள்ளன.
இந்த நிகழ்வுகளை பொதுமக்கள் சிரமமின்றி கண்டு மகிழ 20 முக்கிய பொது இடங்களில் எல்.இ.டி. ராட்சத திரை அமைக்கப்படுகிறது. இணையதளத்தில் நேரடியாக கண்டு களிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல கள்ளழகர், அழகர் கோவிலில் இருந்து புறப்பட்டு எழுந்தருளும் ஒவ்வொரு இடங்களையும் கள்ளழகர் கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், காவல்துறையின் ”TRACK AZHAGAR” என்ற செல்போன் செயலி மூலமாகவும் பொதுமக்கள் தெரிந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விழாவில் பங்கேற்கும் பொதுமக்களின் வசதிக்காக குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியின் மூலம் பணிகளை ஒருங்கிணைக்க உதவி கமிஷனர் நிலை அலுவலர் தலைமையில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1,500 தூய்மைப்பணியாளர்கள் சுகாதாரம் மற்றும் துப்பரவு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 15 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
கள்ளழகர் ஊர்வலம்
சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் தேவைக்கேற்ப தடுப்புகள் அமைத்திடவும், வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்தை கண்காணித்திட காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் இடம், தல்லாகுளம், கள்ளந்திரி ஆகிய பகுதிகளில் தனிக்கவனம் செலுத்தி பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 
சாலையில் இடையூறு ஏதும் இல்லாத வகையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உறுதி செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும்போது ஆற்றில் போதிய அளவு தண்ணீர் திறந்திட பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. உலகளவில் பெருமை வாய்ந்த சித்திரைப் பெருவிழாவை மிகச்சிறப்புடன் நடத்திட அனைத்துத்துறை அலுவலர்கள் தங்களது பொறுப்புணர்ந்து பணியாற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர். 
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பூமிநாதன், வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர் செல்லத்துரை, கள்ளழகர் கோவில் துணை ஆணையர் (பொறுப்பு) அனிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்