‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குப்பைகள் அகற்றப்படுமா?
மதுரை மாநகராட்சி 54-வது வார்டு பிள்ளையார்தோப்பு கொடிமர சந்து பகுதியில் குப்பைகள் அதிக அளவில் தேங்கி உள்ளன. இதனால் இந்தபகுதி மக்கள் துர்நாற்றத்தால் சிரமப்படுகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே தேங்கிய குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஹசீப்குலாம், காஜிமார் தெரு.
சுகாதார சீர்கேடு
விருதுநகர் மாவட்டம் தலைமை அரசு ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறை, நோயாளிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் நோயாளிகள், உதவியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. கழிவறையை அவ்வப்போது சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?.
-பரத்ராஜா, விருதுநகர்.
குடிநீர் வசதி
கோடைக்காலம் தொடங்கி விட்டதால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையங்களில் போதிய அளவு குடிநீர் இன்றி பொதுமக்கள் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே அந்தந்த நகராட்சி, பேரூராட்சிகள் சார்பில் பயணிகளுக்கு பயன்படும் வகையில் குடிதண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
-சுரேஷ், திருப்பத்தூர்.
போக்குவரத்து நெரிசல்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் பகுதியில் பகல் நேரங்களில் கனரக வாகனங்கள் அதிக அளவில் வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பள்ளி மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் நெரிசலில் சிக்கி நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த பகுதியில் சீரான போக்குவரத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாகூர், ராமநாதபுரம்.
எரியாத தெருவிளக்கு
விருதுநகர் மாவட்டம் ரெங்கப்பநாயக்கன்பட்டி கிராமம் குள்ளர் தெருவில் தெருவிளக்கு சரிவர எரியவில்லை. போதிய வெளிச்சம் இன்றி காணப்படுவதால் பெண்கள், குழந்தைகள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி வழிப்பறி போன்ற சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றது. அதிகாரிகள் தெருவிளக்கை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர்.
வாகன ஓட்டிகள் அவதி
மதுரை மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து குலமங்கலம் செல்லும் சாலை அகலப்படுத்தப்பட்டது. ஆனால் சாலை ஓரங்களில் மின்கம்பங்கள் குறிப்பிட்ட அளவில் சாலையை ஆக்கிரமித்துள்ளது. இதனால் சாலையில் பயணிக்க முடியாத நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலையின் இருபக்கங்களும் அதிக அளவில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அதிகாரிகள் இதனை ஆய்வு செய்து பொதுமக்கள் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சத்தியமூர்த்தி, கோசாகுளம்.