உண்ணிச்செடியில் இருந்து பர்னிச்சர் பொருட்கள் தயாரிக்கும் மலைவாழ் மக்கள்

ஆசனூரில் உண்ணிச்செடியில் இருந்து பர்னிச்சர் தயாரிக்கும் பணியில் மலைவாழ் மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.;

Update: 2022-04-09 21:10 GMT
ஆசனூரில் உண்ணிச்செடியில் இருந்து பர்னிச்சர் தயாரிக்கும் பணியில் மலைவாழ் மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
கலெக்டர் நடவடிக்கை
ஈரோடு மாவட்டத்தில் உண்ணிச்செடிகளை அழிப்பது மட்டுமின்றி, அந்த செடியின் குச்சிகளை வைத்து பர்னிச்சர்கள் செய்யும் பணியை ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி முன்னெடுத்து உள்ளார்.
ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மூலம் மலைவாழ் மக்களுக்கு கைவினைப்பொருள் பயிற்சி நடத்தப்பட்டது. இதற்காக தாளவாடி ஆதிவாசி முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த 30 பேருக்கு அசோகா ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் உலக வனவிலங்ககள் அமைப்பு சார்பில் உண்ணிச்செடியில் இருந்து பர்னிச்சர் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
பர்னிச்சர்கள்
இதற்காக வனத்துறை மூலம் அடையாளம் காட்டப்படும் பகுதிகளில் இருந்து மலைவாழ் மக்கள் உண்ணிச்செடிகளை வெட்டி சேகரித்து எடுத்து வருகிறார்கள். பின்னர் குச்சிகள் தனியாக எடுக்கப்பட்டு, அவை வேக வைக்கப்படுகின்றன. இதன் மூலம் இந்த குச்சிகள் உறுதியாகவும், மூங்கில் போன்று வளைக்கும் தன்மையும்பெறுகின்றன. அதை வைத்து விரும்பிய வகையில் பர்னிச்சர்கள் செய்யப்படுகின்றன. ஷோபா இருக்கைகள், நாற்காலிகள், பெனா வைக்கும் பெட்டி என 23 வகையான பர்னிச்சர் பொருட்களை இந்த மக்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.
இந்த பொருட்களை விற்பனை செய்ய ஆசனூர் லேண்டனா கேமரா (உண்ணிச்செடி) என்டர்பிரைசஸ் என்ற வணிக ரீதியான அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பர்னிச்சர் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. ஈரோட்டில் உள்ள சில பர்னிச்சர் நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி பர்னிச்சர்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பயனுள்ள பொருட்கள்
இதுபற்றி ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் உள்ள காடுகளை பாதுகாப்பதும், இந்த காட்டை நம்பி வாழும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதும் நமது கடமையாக உள்ளது. எனவே ஒரு பரீட்சார்த்த முறையாக உண்ணிச்செடியில் இருந்து பர்னிச்சர் தயாரிக்கும் ஒரு முயற்சியை தொடங்கினோம். இது ஒரு கைவினை வேலைப்பாடாக மிக சிறப்பான பர்னிச்சர்களாக வந்து உள்ளது. உண்ணிச்செடிகளை பொறுத்தவரை அது காட்டின் சூழலை கெடுக்கும் ஒரு செடியாக கண்டறியப்பட்டு இருக்கிறது. அதை முற்றிலுமாக அழிக்க முடியுமா என்பது கேள்வியாக இருந்தாலும், நமது முயற்சியின் மூலம் வீணாக போகும் ஒரு செடியை வைத்து பயனுள்ள பொருட்களை தயாரிப்பதன் மூலம் அதை பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்தினால், பழங்குடி மக்கள் தங்கள் காடுகளிலேயே அதாவது தங்கள் வாழ்விடங்களிலேயே ஒரு நல்ல தொழில் வாய்ப்பையும், அதன் மூலம் வருவாய் ஈட்டவும் முடியும். அவர்களின் பொருளாதாரமும் உயரும்.
இவ்வாறு கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கூறினார்.

மேலும் செய்திகள்