ஈரோட்டில் பரபரப்பு ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் மாரடைப்பு சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்

ஈரோட்டில் ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அவர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் பயணிகள் உயிர் தப்பினர்.

Update: 2022-04-09 21:06 GMT
ஈரோட்டில் ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அவர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் பயணிகள் உயிர் தப்பினர்.
டிரைவருக்கு மாரடைப்பு
சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக திருப்பூருக்கு நேற்று காலை அரசு பஸ் சென்றது. அந்த பஸ்சை நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த பழனிசாமி (வயது 45) என்பவர் ஓட்டினார். ஈரோடு பஸ் நிலையத்தை வந்தடைந்த அந்த பஸ், பயணிகளை ஏற்றிய பிறகு திருப்பூர் நோக்கி புறப்பட்டது. பஸ்சில் சுமார் 20 பயணிகள் இருந்தனர்.
ஈரோடு செங்கோடம்பள்ளத்தை கடந்து திண்டல் நோக்கி பெருந்துறைரோட்டில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தபோது, டிரைவர் பழனிசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடியது. உடனே சாமர்த்தியமாக செயல்பட்ட பழனிசாமி பிரேக்கை அழுத்தினார். அதற்குள் சாலையின் தடுப்புச்சுவரில் பஸ் மோதி நின்றது. இதனால் பஸ்சின் முன்பகுதி நொறுங்கி சேதம் அடைந்தது.
தடுப்புச்சுவரில் மோதியது
பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பதற்றத்துடன் கீழே இறங்கினார்கள். இதையடுத்து நெஞ்சு வலியால் தவித்து கொண்டிருந்த பழனிசாமியை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த விபத்து ஏற்பட்டதும் பெருந்துறை ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்கள். அப்போது அந்த வழியாக வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், தனது காரை நிறுத்தி விபத்து குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார். விபத்தில் சிக்கிய பயணிகளுக்கு உதவி செய்யுமாறும், போக்குவரத்தை சரிசெய்யுமாறும் போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். இந்த விபத்தில் டிரைவரின் சாமர்த்தியத்தால் பஸ்சின் வேகம் உடனடியாக குறைக்கப்பட்டு தடுப்புச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்