வைத்தியநாத சுவாமி கோவிலில் நந்திபெருமான் திருக்கல்யாணம்

வைத்தியநாத சுவாமி கோவிலில் நந்திபெருமான் திருக்கல்யாணம் நடந்தது.

Update: 2022-04-09 21:04 GMT
கீழப்பழுவூர்:

திருக்கல்யாணம்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தை சேர்ந்த திருமழபாடி கிராமத்தில் சுந்தராம்பிகை உடனுைற வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் நந்திபெருமான் திருக்கல்யாண விழா நடைபெறுவது வழக்கம். நந்தி கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம் நடைபெறும் என்ற ஐதீகத்தின்படி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் இத்திருக்கல்யாணத்தை காண வந்து செல்வார்கள்.
இந்நிலையில் இந்த ஆண்டு நந்திபெருமான் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக திருவையாறு அய்யாரப்பர் கோவிலில் இருந்து வசிஷ்ட முனிவரின் புதல்வி சுயசாம்பிகை தேவியார் பல்லக்கில் பெண் அழைப்பாக கொண்டு வரப்பட்டார். இதைத்தொடர்ந்து சுந்தராம்பிகை மற்றும் வைத்தியநாத சுவாமிகள் ஒரு பல்லக்கிலும், நந்திபெருமான் மற்றும் சுயசாம்பிகை மற்றொரு பல்லக்கிலும் கோவிலை சுற்றி ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவிலின் முன்பிருந்த திருமண மேடைக்கு வந்தடைந்தனர்.
பக்தர்கள் தரிசனம்
இதையடுத்து அங்கு சுயசாம்பிகை தேவிக்கும் நந்தி பெருமானுக்கும் எண்ணெய், மஞ்சள், சந்தனம், விபூதி, இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பல வண்ண மலர்களால் மணமக்களாக அலங்கரிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து வேத விற்பன்னர்கள் யாகபூஜையுடன் வேத மந்திரங்கள் ஓத நாதஸ்வர இன்னிசையுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சுயசாம்பிகை தேவியார் கழுத்தில் நந்திபெருமான் தாலி கட்ட திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அட்சதை தூவி, திருக்கல்யாணத்தை தரிசனம் செய்தனர்.
வழிபாடு
பின்னர் மணமக்களுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு ஊஞ்சலில் அமர்த்தப்பட்டனர். அங்கு ஊஞ்சலில் ஆடியபடியே சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதைத்தொடர்ந்து சுயசாம்பிகை மற்றும் நந்திபெருமான் கண்ணாடி பல்லக்கில் ஏற்றப்பட்டு திருமண கோலத்தில் கோவிலை சுற்றி ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டனர். இதில் வீடுகள் தோறும் பக்தர்கள் மாவிளக்கு போட்டு வழிபாடு செய்தனர்.
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, கீழப்பழுவூர் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு தலைமையிலான 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும் செய்திகள்