குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சாத்தாம்பாடி ஊராட்சிக்கு உட்பட்டது குஞ்சுவெளி கிராமம். இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு குஞ்சுவெளி மெயின் ரோட்டிற்கு அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றும் மோட்டார் பழுதானதாக கூறப்படுகிறது. இதனால் தண்ணீர் இல்லாமல் சிரமம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை முத்துவாஞ்சேரி -அரியலூர் சாலையில் காலிக்குடங்களை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புசெல்வன் ஆகியோர் பொதுமக்களிடம் உடனடியாக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.