ரூ.1½ லட்சம் கடன் பெற்று மோசடி; பெண் கைது
ரூ.1½ லட்சம் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டார்.
வி.கைகாட்டி:
கடனாக பணம் பெற்றார்
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவா் செல்வ முத்துக்குமரன். இவரது மனைவி மருதாம்பாள்(வயது 37). இவர் அதே பகுதியை சேர்ந்த பலரிடம் நன்றாக பேசி பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சத்யா என்பவரிடம் ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்தை கடனாக பெற்று, பின்னா் அதனை திருப்பி தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சத்யா அளித்த புகாரின் அடிப்படையில் கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
பெண் கைது
விசாரணையில், நிலம் வாங்குவதற்கு உடனடியாக பணம் வேண்டும் என்றும், எனவே வங்கி மற்றும் சுய உதவிக்குழுவில் கடனாக பணம் பெற்று தரும்படியும், நகைகளை அடகு வைத்து கடனாக பணம் தரும்படியும் அப்பகுதி மக்களிடம் மருதாம்பாள் வற்புறுத்தி, அவர்களிடம் பணம் மற்றும் நகைகளை பெற்றுக்கொண்டு திருப்பித் தராமல் சில ஆண்டுகளாக ஏமாற்றி வந்ததாகவும், அதன்படி சத்யாவிடம் பணம் பெற்று திருப்பி தராமல் ஏமாற்றியதாகவும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரவிகுமார் தலைமையிலான பெண் போலீசார் நேற்று மருதாம்பாளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இதனைத்தொடர்ந்து மருதாம்பாளை திருச்சி பெண்கள் சிறையில் போலீசார் அடைத்தனர்.