மாசடைந்த செக்கான் குட்டை ஏரியை தூர்வார வேண்டும்
மாசடைந்த செக்கான் குட்டை ஏரியை தூர்வார கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடையார்பாளையம்:
கோரைப்புற்கள் வளர்ந்து...
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் 2-வது வார்டுக்கு உட்பட்ட வடக்கு காலனி தெருவில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவின் மையப்பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் செக்கான் குட்டை ஏரி பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த ஏரியை குளிப்பதற்கும், கால்நடைகளின் குடிநீர் தேவைக்கும், விவசாய நிலத்திற்கு பாசனத்திற்காகவும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் செக்கான்குட்டை ஏரியானது கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதன் காரணமாக இந்த ஏரியானது மாசடைந்து, நாளடைவில் ஏரி முழுவதும் கோரைப்புற்கள் மற்றும் செடிகள் வளர்ந்து, பாசி படர்ந்து ஏரியை ஆக்கிரமித்துள்ளன.
கோரிக்கை
இதன் காரணமாக அந்த ஏரி சுகாதார தன்மையை இழந்து, முற்றிலும் மாசடைந்து பொதுமக்கள் குளிப்பதற்கும், கால்நடைகளுக்கு குடிநீராக பயன்படுத்துவதற்கும் லாயக்கற்ற நிலையில் உள்ளது. இருப்பினும் வேறுவழியின்றி இந்த ஏரியில் குளிக்கும் பொதுமக்களுக்கு உடல் அரிப்பு, காய்ச்சல் போன்ற பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு, சிரமப்படும் நிலை உள்ளது. மேலும் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் ஏரியில் நீர் அருந்தும்போது புதர் செடிகளில் சிக்கி உயிர் விடும் அபாயமும் உள்ளது.
மாசடைந்த செக்கான்குட்டை ஏரியை தூர்வார வேண்டும் என்று பலமுறை அதிகாரிகளிடத்தில் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு செக்கான்குட்டை ஏரியை தூர்வாருவதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.