தஞ்சை பர்மாபஜாரில் 33 கடைகளுக்கு சீல் வைப்பு

தஞ்சை பர்மாபஜாரில் 33 கடைகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். ரூ.1 கோடியே 53 லட்சம் குத்தகை பாக்கி செலுத்தாததால் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

Update: 2022-04-09 20:30 GMT
தஞ்சாவூர்;
தஞ்சை பர்மாபஜாரில் 33 கடைகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். ரூ.1 கோடியே 53 லட்சம் குத்தகை பாக்கி செலுத்தாததால் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
பர்மா பஜார்
தஞ்சை பர்மாபஜாரில் 108 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் 1984-ம் ஆண்டு பர்மாவில் இருந்து தஞ்சை வந்தவர்களின் வாழ்வாதாரத்துக்காக ஒதுக்கப்பட்டது. ஆரம்பத்தில் 87 கடைகள் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் அது விரிவு படுத்தப்பட்டு தற்போது 108 கடைகளாக உள்ளது.
இதில் 1 முதல் 33 வரை உள்ள கடைகளுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து 78 ஆயிரம் குத்தகையாகவும், 33 முதல் 87 வரை யிலான கடைகளுக்கு குத்தகையாக ரூ.98 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டது. இதில் கடைகள் வைத்திருக்கும் பலர் குத்தகை தொகையினை செலுத்தி வந்தனர்.
ரூ.1.53 கோடி குத்தகை பாக்கி
இதில் சிலர் குத்தகை பாக்கியை செலுத்தாமல் இருந்தனர். அவ்வாறு குத்தகை பாக்கி செலுத்தாமல் கடை வைத்திருந்தவர்கள் ரூ.1 கோடியே 53 லட்சம் குத்தகை பாக்கி செலுத்த வேண்டி இருந்தது. இந்த பாக்கி தொகையை செலுத்துமாறு வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு நோட்டீசு அனுப்பினர்.
அதில் குத்தகை பாக்கி தொகையில் முதல் கட்டமாக ரூ.1 லட்சத்தை செலுத்தி விட்டு கடையை நடத்துமாறும் தெரிவித்து இருந்தனர். அதன்படி சிலர் குத்தகை பாக்கியயை செலுத்தினர். 33 கடைக்காரர்கள் மட்டும் குத்தகை பாக்கியை செலுத்தாமல் இருந்து வந்தனர்.
33 கடைகளுக்கு சீல் வைப்பு
இதையடுத்து நேற்று காலை குத்தகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைப்பதற்காக வருவாய்த்துறையினர் வந்தனர். தஞ்சை தாசில்தார் மணிகண்டன் முன்னிலையில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய்த்துறையினர் என 20-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு வந்து குத்தகை பாக்கி செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.
அதன்படி செல்போன் விற்பனை கடைகள், செல்போன் பழுது பார்க்கும் கடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை கடைகள், ரீசார்ஜ் கடைகள், துணிக்கடைகள் என 33 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.
போலீசார் குவிப்பு
கடைகள் சீல் வைக்கப்பட்டதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு அமல்தாஸ், தஞ்சை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என ஏராளமானோர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

மேலும் செய்திகள்