சமரச தீர்வு தின விழிப்புணர்வு ஊர்வலம்

சமரச தீர்வு தின விழிப்புணர்வு ஊர்வலம்

Update: 2022-04-09 20:15 GMT
திருச்சி, ஏப்.10-
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, திருச்சி மாவட்ட சமரச மையம் மூலம் 17-ம் ஆண்டு சமரச தீர்வு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அதையொட்டி, திருச்சி கண்டோன்மெண்ட் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்தை மாவட்ட முதன்மை நீதிபதி கே.பாபு தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன் ஊர்வலத்திலும் பங்கேற்றார். சமரச மைய முதன்மை சார்பு நீதிபதியும், ஒருங்கிணைப்பாளருமான கே.விவேகானந்தன் வரவேற்றார். திருச்சி குற்றவியல் வக்கீல்கள் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் முன்னிலை வகித்தார். 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பி.தங்கவேல் வாழ்த்துரை வழங்கினார். சமரச தீர்வுக்கு உகந்த வழக்குகளான தனிநபர் தகராறு, பண வசூல் தகராறு, குடும்ப பிரச்சினை, சொத்து பிரச்சினை, வாடகை பிரச்சினை, காசோலை மோசடி உள்ளிட்ட பல வழக்குகளுக்கு தீர்வு காணப்படும் என்றும், சமரச தீர்வு மையத்தில் முடித்து வைக்கப்படும் வழக்குகளுக்கு அப்பீல் கிடையாது. பாதிக்கப்பட்டவர் மற்றும் எதிர்தரப்பினர் இருவரும் வெற்றி பெற்றவர்களாக கருதப்படுவர் என்றும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊர்வலம் கோர்ட்டு வளாகத்தில் தொடங்கி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையம், பாரதிதாசன் சாலையில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை வரை சென்று மீண்டும் கோர்ட்டு வளாகத்தை அடைந்தது. சமரச தின விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாவட்ட முதன்மை குற்றவியல் கோர்ட்டு நீதிபதி சாந்தி, நீதிபதிகள் ஜெயக்குமார், கோகிலா மற்றும் வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள், மாவட்ட குழந்தைகள் வளர்ச்சிக்குழு பணியாளர்கள் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்