தோட்டத்தில் புகுந்து நாயை கடித்து சென்ற சிறுத்தை
களக்காடு அருகே தோட்டத்தில் புகுந்து நாயை கடித்துவிட்டு சிறுத்தை சென்றது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிவபுரம், கள்ளியாறு பகுதியில் கடந்த 2 நாட்களாக சிறுத்தை ஒன்று அட்டகாசம் செய்து வருகிறது. இரவு நேரத்தில் மலையடிவார தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை ஒரு நாயை அடித்துக் கொன்று தூக்கிச் சென்று விட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சிறுத்தை மேலும் ஒரு நாயை கடித்தது. அப்போது, அங்கு வந்த விவசாயிகள் சத்தம் போட்டதால் நாயை போட்டு விட்டு சிறுத்தை தப்பி விட்டது. நாய் காயத்துடன் உயிர் தப்பியது.
இதுகுறித்து களக்காடு வனத்துறையினருக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்தனர். வனத்துறை ஊழியர்கள் அப்பகுதியில் பதிவாகியிருந்த சிறுத்தையின் கால்தடங்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து சிறுத்தை அட்டகாசத்தால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “சிறுத்தை அட்டகாசத்தால் நாங்கள் அச்சத்தில் உள்ளோம். பகல் நேரங்களில் கூட எங்களால் விளைநிலங்களுக்கு செல்ல முடியவில்லை. ஏற்கனவே இப்பகுதிகளில் கடமான்கள், காட்டு பன்றிகள் தோட்டங்களில் அட்டகாசம் செய்து வாழைகளை சாய்த்து சேதப்படுத்தி வருகிறது. தற்போது, சிறுத்தை வருவதால் விளைநிலங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறோம். இதனால் எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வருகிறது” என்றனர்.
விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் முருகன் கூறுகையில், “பொதுவாக களக்காடு பகுதியில் கோடை காலம் தொடங்கியதும் வனவிலங்குகள் அட்டகாசமும் அதிகரித்து விடும். வனத்துறையினர் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மலையடிவாரத்தில் வனத்துறையினரால் அமைக்கப்பட்டு செயல் இழந்து கிடக்கும் சோலார் மின்வேலிகளை சீரமைக்க வேண்டும். வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.