பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?-அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2022-04-09 19:51 GMT
விருதுநகர்
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
பட்ஜெட் விளக்க கூட்டம் 
விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே நகரசபை தலைவர் மாதவன் தலைமையில் பட்ஜெட் விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:- 
இந்தியாவில் ஈடு இணையில்லா முதல் -அமைச்சராக மு.க. ஸ்டாலின் உள்ளார். எந்தத் துறையை எடுத்தாலும் அவர் முத்திரை பதித்துள்ளார். இந்தியாவில் முதன்மையான முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தான். அவர் சட்டசபையில் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை எங்கு தொட்டாலும் இனிக்கும் வகையில் உள்ளது.
சொத்து வரி உயர்வு என்பது மத்திய அரசு நிர்ப்பந்தத்தின் காரணமாக கொண்டு வரப்பட்டது. மனமுவந்து கொண்டு வரவில்லை என்றும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். நான் இங்கு வரும்போது பஸ் நிலையத்தை சுற்றி மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலைமையை சரிசெய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி தேவை என்பதால்தான் சொத்து வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார். ஆனால் பெட்ே்ரால், டீசல், கியாஸ் விலை உயர்வு பற்றி எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்க தயாரில்லை. மத்திய மந்திரி அமித்ஷா ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை கொண்டு வரவேண்டும் என்று கூறுகிறார். 
நேரு கொடுத்த உறுதிமொழியை தகர்த்துவிட்டு, பேரறிஞர் அண்ணாவும், கருணாநிதியும் கொண்டு வந்த இரு மொழிக் கொள்கைக்கு எதிராக சட்டசபையில் ஆங்கிலத்தை எடுத்து விட்டால் அந்த இடத்தில் இந்தி வந்து குந்திக் கொள்ளும் என்று அவரது பாணியில் தெரிவித்த பெருந்தலைவர் காமராஜரின் கருத்துக்கு எதிராக அமித்ஷா இந்தியை கொண்டு வரவேண்டும் என்கிறார். அதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது அமித்ஷாவா? என்ன சொன்னார்? எனக்கு தெரியாது என்று சொல்கிறார். 
ஆதரவு
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உங்களுக்காக சுற்றுச்சுழன்று உழைக்கக்கூடிய உதயசூரியன். அவருக்கு என்றென்றும் நீங்கள் ஆதரவு கரம் நீட்ட வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் செய்திகள்