வத்திராயிருப்பு, ராஜபாளையம் பகுதியில் பலத்த மழை
வத்திராயிருப்பு, ராஜபாளையம் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது
வத்திராயிருப்பு
வத்திராயிருப்பு, ராஜபாளையம் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது.
பலத்த மழை
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழையாக பெய்ய தொடங்கியது. இந்த மழை 3 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. பலத்த மழையால் வத்திராயிருப்பில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறுபோல் ஓடியது.
மழை நீருடன் வாருகால் கழிவுநீரும் சேர்ந்து ஓடியதால் தெருக்கள் முழுவதும் கழிவு நீர் தேங்கி நின்றது. இந்த மழையால் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அரசு அலுவலகத்திற்குள் புகுந்த மழைநீர்
இந்நிலையில் வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் வருவாய்த்துறை அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது. வருவாய்த்துறை அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் தாழ்வான பகுதியில் உள்ளதால் மழைநீரானது அலுவலகத்திற்குள் புகுந்தது. இதனால் அலுவலகத்தில் உள்ள பதிவுகள் அனைத்தும் மழையில் நனையாமல் இருப்பதற்காக அங்கிருந்த நாற்காலிகள் மீது அதிகாரிகள் எடுத்து வைத்திருந்தனர்.
சிவகாசி
சிவகாசியில் நேற்று முன்தினம் மாலை திடீரென பலத்த மழை பெய்தது. சிவகாசி-செங்கமலநாச்சியார்புரம் ரோட்டில் ரெயில்வே நிலையம் அருகில் உள்ள சாலை பராமரிப்பு நடந்து வந்த நிலையில் அந்த பகுதியில் மழைநீர் தேங்கி இருந்தது. இதனால் நேற்று காலை அந்த பகுதியை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை 1 மணி நேரம் மழை பெய்தது. இந்த மழையால் எந்த பாதிப்பும் இல்லை.
ராஜபாளையத்தில் நேற்று மாலை இடியுடன் மழை மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவில் மற்றும் ராஜபாளையம் நகர், சத்திரப்பட்டி, தளவாய்புரம், செட்டியார்பட்டி, முகவூர், சேத்தூர், தேவதானம் ஆகிய பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விருதுநகர்
விருதுநகரில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இந்தநிலையில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் திடீரென மழை பெய்தது. ஒரு மணி நேரம் பெய்த மழையினால் சாலைகளில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று மாலை 5 மணி முதல் 8 வரை பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.