தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-04-09 19:45 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா சோமரசம்பேட்டை பஞ்சாயத்துக்குட்பட்ட வாசன் சிட்டியில் புதிதாக ரேஷன்கடை அமைக்க வாடகைக்கு இடம் கிடைத்தது. ஆனால் கடை திறக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த ரேஷன் கடையை திறந்தனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சோமரசம்பேட்டை, திருச்சி.
குடிநீர் குழாயில் உடைப்பு
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா திருமாந்துறை கிராமம் காமராஜ் நகர் கீழக்குடிகாடில் இருந்து எறையூர் சர்க்கரை ஆலைக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சென்று வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரியா, பெரம்பலூர்.
சுகாதார சீர்கேடு
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் 9-வது வார்டில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீர் அடைப்பை நீக்குவதுடன் அப்பகுதியில் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவி, அரியலூர்.
திறந்த நிலையில் இருக்கும் காவிரி கூட்டு குடிநீர் தொட்டிகள்
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூட்டு குடிநீர் செல்லும் வழியில் உள்ள தொட்டிகளில் இருக்கும் வால்வுகள் சரியாக மூடப்படாமல் ஒரு சில இடங்களில் தண்ணீர் கசிந்து வருகிறது. இதனை அப்பகுதி மக்கள் சிலர் துணி துவைப்பது, குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திறந்த நிலையிலேயே தொட்டிகள் இருப்பதால் விபத்து ஏற்படக்கூடிய சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த தொட்டிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ரவி, புதுக்கோட்டை.
பயணிகள் அவதி
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையத்தில் இருந்து புகழூர் செல்லும் சாலையில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இந்தநிலையில் வெளியூர்களை சேர்ந்த சிலர் தங்களுடைய உடமைகளை நிழற்குடையில் வைத்து கூடைகளை பின்னும் தொழில் செய்து வருகின்றனர். இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில் மற்றும் மழையில் நனைந்து அவதியடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலா, கரூர்.

மேலும் செய்திகள்