பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை

திருச்சி அருகே பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-09 19:41 GMT
நவல்பட்டு, ஏப்.10-
திருச்சி அருகே பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் இக்பால் காலனியை சேர்ந்தவர் நடராஜன். ஓய்வு பெற்ற சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவருடைய மனைவி ஆதிலட்சுமி (வயது 56). போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவர் திருச்சி அருகே நவல்பட்டில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பெண் காவலர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார். இதனால் இவர் காவலர் பயிற்சி பள்ளியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இவருக்கு லெனின் (26), பாரத் (22) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். லெனின் என்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார். பாரத் தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகிறார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்தநிலையில் நேற்று காலை ஆதிலட்சுமி தனது அறையை விட்டு நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நடராஜன் கதவை தட்டி பார்த்துள்ளார். கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, அங்கிருந்த மின்விசிறியில் சேலையில் தூக்குப்போட்ட நிலையில் ஆதிலட்சுமி பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
காரணம் என்ன? போலீசார் விசாரணை
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், ஆதிலட்சுமி இரு வங்கிகளில் கடன் பெற்று இருந்ததும், சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததும் தெரியவந்தது. பின்னர், அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதிலட்சுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் போலீசார்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்