காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட குவிந்த விவசாயிகள்
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட குவிந்த விவசாயிகள்
பாசன சங்க தேர்தலில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் மற்றும் உறுப்பினருக்கான வேட்பு மனு கடந்த 4ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது.
அப்போது வேட்பு மனுக்களை காரணமின்றி அதிகாரிகள் தள்ளுபடி செய்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். எனவே வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு என்ன காரணம் என்ற உத்தரவை தரக்கோரி நேற்று ஆர்.டி.ஓ. அலுவலக முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் உப்பாறு பாசன விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று காலையில் தாராபுரம்ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட 70 க்கும் மேற்பட்ட விவசாயிகள் குவிந்தனர்.
பேச்சுவார்த்தை
பின்னர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்குள் விவசாயிகள் நுழைய முயன்றனர். அவர்களை தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஆர்.டி.ஓ. அலுவலக அதிகாரிகள், போலீசார் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாளை மறுநாள் தேர்தல் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் விவசாயிகளிடம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தனர்.இதனை தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.