மோகனூர் அருகே தடுமாறி கீழே விழுந்த தொழிலாளி திடீர் சாவு-போலீசார் விசாரணை
மோகனூர் அருகே தடுமாறி கீழே விழுந்த தொழிலாளி திடீரென இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
மோகனூர்:
மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூர் ஊராட்சி கீழ புதூரை சேர்ந்தவர் யோகராஜன், (வயது 46), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 1-ந்் தேதி மோகனூரில் உள்ள தனது உறவினரின் காய்கறி கடைக்கு சென்றார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டுள்ளது. இதை சாதாரண காயம் என நினைத்துக்கொண்டு இவர் வீட்டில் ஓய்வெடுத்தார். அடுத்த சில நாட்களில் திடீரென அடிக்கடி தலைவலி வந்ததால் தொடர்ந்து நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற சென்றார். அங்கு சி.டி. ஸ்கேன் செய்து பார்த்ததில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி யோகராஜன் நேற்று முன்தினம் இரவு இறந்து விட்டார்.
இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை பாலசுப்பிரமணியன் மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழழகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்து பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.