காரமடையில் 20 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதம்

காரமடையில் சூறைவளி காற்றுடன் பெய்த மழையால் 20 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதமானது.;

Update: 2022-04-09 18:01 GMT
காரமடை

கோவை மாவட்டம் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளான தோலம்பாளையம் ஆதி மதியனூர், வெள்ளியங்காடு பணப் பாளையம், பணபாளையம் புதூர், தாயனூர், கண்டியூர் ஆகிய பகுதிகளில் வாழை விவசாயம் பிரதானமாக செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காரமடை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது சூறாவளி காற்றும் வீசியது. 

தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 20 ஆயிரம் வாழைகள் சாய்ந்து விழுந்து சேதமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில், பல ஆயிரம் செலவு செய்து வழை பயிரிட்டு இருந்த நிலையில் ஒரே நாள் இரவு பெய்த மழையால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழைகள் சேதம் அடைந்துள்ளது.

 இதன் காரணமாக விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகளுக்கு அரசு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

தமிழக விவசாய சங்க மாநில செயலாளர் வேணுகோபால் கூறும்போது, வனவிலங்குகள் மற்றும் காற்று மழையால் வாழை பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதற்கு அரசு தரும் நஷ்ட ஈடு மிகவும் குறைவாகவும், போதுமானதாகவும் இல்லை. எனவே அரசு சேதமான வாழைக்கு ரூ.100 முதல் ரூ.120 வரை நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்