தனியார் நிறுவன ஊழியர் வங்கி கணக்கில் ரூ.7¼ லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கோவை திரும்பிய தனியார் நிறுவன ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.7¼ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-04-09 18:00 GMT

கோவை குனியமுத்தூர் பி.கே.புதூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 55). இவர் கடந்த சில ஆண்டுகளாக துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அப்போது அவருக்கு கிடைத்த சம்பளத்தை ஒரு தனியார் வங்கியில் செலுத்தி வந்தார். 

இந்த நிலையில் அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன் வெளிநாட்டில் இருந்து கோவை திரும்பினார். இதையடுத்து அவர் தனது வங்கி கணக்கில் உள்ள பண விவரங்களை சரிபார்த்து உள்ளார்.

 அப்போது ரூ.7 லட்சத்து 13 ஆயிரம் குறைவாக இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவை மாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் அவரது வங்கி கணக்கில் இருந்து 16.11.21 முதல் 19.11.21 வரை பல்வேறு கட்டங்களாக ரூ.7.13 ஆயிரம் பணம் ஆன்லைன் மூலம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் கடந்த சில மாதங்களாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் பணம் திருடுவது அதிகரித்து உள்ளது. 

மேலும் செய்திகள்