ரூ.1 கோடி போதை பவுடர் சிக்கியது 2 பேர் கைது
ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 1 கோடி மதிப்புள்ள போதை பவுடர் போலீசாரிடம் சிக்கியது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 1 கோடி மதிப்புள்ள போதை பவுடர் போலீசாரிடம் சிக்கியது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கைக்கு கடத்த முயற்சி
ராமேசுவரம் துறைமுகப் பகுதியில் இருந்து மீன்பிடி படகு மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்பட உள்ளதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் கூடுதல் சூப்பிரண்டு தீபக் சிவாஜ் தலைமையில் குற்றப்பிரிவு தலைமை காவலர் ரமேஷ் உள்ளிட்டோர் துறைமுக பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த பாம்பன் புயல்காப்பகம் பகுதியை சேர்ந்த தஷ்மன் (வயது 28) என்பவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்த வெள்ளை பவுடர் போன்ற போதைப்பொருளை குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனர். பின்னர் நகர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
பறிமுதல்
விசாரணையில் இந்த போதை பவுடரை தங்கச்சிமடம் பொட்டேல் நகர் பகுதியை சேர்ந்த பிரைட்வின் என்பவர் கொடுத்து அனுப்பியது தெரியவந்ததால், அவரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் 2 பேரிடமும் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட இந்த போதை பவுடர் சுமார் ஒரு கிலோ எடை இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
தீவிர விசாரணை
இந்த போதைப் பொருளை யாரிடம் இருந்து வாங்கி வந்தார்கள், இலங்கையில் யாருக்கு கடத்த இருந்தார்கள்? என்பது குறித்து அறிய போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள இந்த போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ. 1 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.