கீழக்கரை,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, மாயாகுளம், ஏர்வாடி இதம்பாடல் உள்ளிட்ட பல ஊர்களில் நேற்று பகல் நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. குறிப்பாக இதம்பாடல், ஏர்வாடி பகுதியில் நேற்று பகல் ஒரு மணிக்கே பார்ப்பதற்கு மாலை 6 மணி போல் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் சாலைகளில் அனைத்து வாகனங் களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வந்தன. கீழக் கரை பகுதியில் பெய்த பலத்த மழையால் கிழக்கு கடற்கரை சாலை ஆட்டோ நிறுத்தம் எதிரே சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.
இதேபோல் ராமேசுவரம் பகுதியிலும் நேற்று அதிகாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.இதனால் பஸ் நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எஸ்.பி.ஏ. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே மற்றும் தாச பக்த ஆஞ்சநேயர் கோவில் எதிரே 2 இடங்களிலும் அதிக அளவில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வந்த நிலையில் நேற்று பரவலாக நல்ல கோடை மழை பெய்ததால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.