மாமனாரை கொடூரமாக கொன்ற லாரி டிரைவர்

மாமனார், மாமியார், மனைவி ஆகியோரை லாரி டிரைவர் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் மாமனார் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2022-04-09 16:55 GMT
தேவகோட்டை, 
மாமனார், மாமியார், மனைவி ஆகியோரை லாரி டிரைவர் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் மாமனார் பரிதாபமாக இறந்தார்.
லாரி டிரைவர்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள தாணிச்சா ஊருணி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 42). டிப்பர் லாரி டிரைவர். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 
பாலமுருகன் அடிக்கடி மது குடித்து வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் செல்வி, கணவரிடம் கோபித்துக் கொண்டு சித்தானூர் சமத்துவபுரத்தில் உள்ள தனது தந்தை பூமிநாதன் (65) வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் பாலமுருகன் மோட்டார் சைக்கிளில் மாமனார் வீட்டுக்கு சென்றார். செல்வியை தன்னுடன் குடும்பம் நடத்த அனுப்பி வைக்கும்படி கேட்டு மாமனார் பூமிநாதன், மாமியார் முனியாத்தாள் (58) ஆகியோரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். 
3 பேருக்கு கத்திக்குத்து
அப்போது அவர்கள், காலையில் பேசிக்கொள்ளலாம் என கூறி உள்ளனர். இதனை பாலமுருகன் ஏற்க மறுத்து தொடர்ந்து மாமனார், மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து பூமிநாதன் மற்றும் குடும்பத்தினர் வீட்டுக்குள் சென்றுவிட்டனர். 
இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த பாலமுருகன் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு வீட்டு வாசலில் தொடர்ந்து சத்தம் போடவே, பூமிநாதன் வெளியே வந்துள்ளார். அப்போது பாலமுருகன் கத்தியால் அவரை சரமாரியாக குத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு முனியாத்தாள், செல்வி ஆகியோர் ஓடி வந்தனர்.
அவர்கள் பாலமுருகனை தடுக்க முயன்றனர். அவர்களையும் பாலமுருகன் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையில் அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். இதனை பார்த்ததும் பாலமுருகன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டார்.
பரிதாப சாவு
கத்திக்குத்து காயம் அடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் பூமிநாதன் பரிதாபமாக இறந்தார்.
அவருடைய மனைவி முனியாத்தாள், மகள் செல்வி ஆகியோர் தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். செல்வியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைது
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தேவகோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சிவக்குமார், தாலுகா இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 
தப்பிச்சென்ற பாலமுருகனை கைது செய்தனர். அவரிடம் இருந்து  கத்தி மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்