மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.
மொரப்பூர்:
மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கெரகோடஅள்ளி ஊராட்சி, ஜங்காலப்பன் குட்டையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4.91 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தடுப்பணை கட்டும் பணி, ஆர்.கோபிநாதம்பட்டி ஊராட்சி ராமாபுரம் காலனியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டும் பணி, ரூ.43.88 லட்சம் மதிப்பீட்டில் தர்மபுரி சாலை முதல் கிருஷ்ணன் கொட்டாய் வரை ஜல்லி சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கதிர்நாயக்கனஅள்ளி ஊராட்சியில் ரூ.8.90 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணி, ஜக்குப்பட்டி ஊராட்சியில் ரூ.17.93 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணி, ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் கம்பைநல்லூர் செம்மனஅள்ளி சாலை முதல் காட்டாம்பட்டி வரை நடைபெற்று வரும் ஜல்லி சாலை பணி ஆகியவற்றை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வகுரப்பம்பட்டி ஊராட்சியில் ரூ.18.74 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பேவர்பிளாக் அமைக்கும் பணியை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், மதலைமுத்து, உதவி பொறியாளர்கள் அன்பழகன், பழனியம்மாள் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் இன்பசேகரன், சுகந்தி, ஊராட்சி மன்ற தலைவர் கவிதா செந்தில்குமார், பழனியம்மாள் முனிராஜ், துணைத்தலைவர் மூர்த்தி, ஊராட்சி செயலாளர்கள் மாதேசன், கிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.