சொத்து தகராறில் விவசாயி வெட்டிக்கொலை மகன் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

மாரண்டஅள்ளி அருகே சொத்து தகராறில் விவசாயியை வெட்டிக்கொலை செய்த மகன் உள்பட 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் திவ்யதர்சினி உத்தரவிட்டார்.;

Update: 2022-04-09 16:51 GMT
பாலக்கோடு:
மாரண்டஅள்ளி அருகே சொத்து தகராறில் விவசாயியை வெட்டிக்கொலை செய்த மகன் உள்பட 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் திவ்யதர்சினி உத்தரவிட்டார்.
விவசாயி கொலை
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள எருதுகூடஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 75), விவசாயி. இவருக்கு, 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். இவரது மனைவி முனியம்மாள், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததால் மகள் நாகம்மாள் வீட்டில் வசித்து வந்தார். முனியப்பன் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் மகள்களுக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்தார்.
இதற்கு கட்டிட மேஸ்திரியான அவரது மகன் மாது (44) எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதனையும் மீறி 1 ஏக்கர் நிலத்தை விற்க விலை பேசி ரூ.1லட்சம் முன்பணமாக வாங்கி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாது, அதே பகுதியை சேர்ந்த உறவினர்கள் மாரியப்பன் (33), பெருமாள் (42), மாதையன் (42) ஆகியோருடன் சேர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி முனியப்பனை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார்.
4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாது உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் விவசாயியை கொலை செய்த மாது உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினிக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் ஜாபர் மற்றும் போலீசார் மாது உள்ளிட்ட 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்