தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
தூத்துக்குடி அருகே உள்ள திம்மராஜபுரம், அல்லிக்குளம் மற்றும் வடக்கு காரசேரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் திம்மராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பேரூரணி பகுதியில் மாவட்ட சிறைச்சாலை அருகில் காலியாக உள்ள அரசு நிலத்தில் 52 நரிக்குறவர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு பட்டா வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. ராஜாராமன் நகரில் திருநங்கைகளுக்காக கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளேன். திம்மராஜபுரம் ஊராட்சி அலுவலக கட்டுமான பணிகளை விரைந்து முடித்து அலுவலக பயன்பாட்டிற்கு கொண்டுவர துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வருகை பதிவேடு
ராமசாமிபுரம்புதூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை விரைந்து தொடங்குமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். மேலும் இந்த பகுதியில் 20 குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களுக்கு அங்கன்வாடி மையம் அமைத்து கொடுப்பதற்கும், ரேஷன் கடை அமைத்து கொடுப்பதற்கும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வரபெற்றுள்ளது. பொதுமக்களின் கோரிக்கையினை நிறைவேற்றிட இடம் தேர்வு செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடந்து வரும் மழைநீர் சேகரிப்பு அகழி வெட்டும் பணியினை பார்வையிட்டு வருகை பதிவேடு குறித்து ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.
ஸ்ரீவைகுண்டம் வட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கு காரசேரி ஊராட்சியில் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள வீடுகளுக்கு பட்டா வழங்குவதற்காக ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரிகள்
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பரிமளா, தாசில்தார்கள் ஜஸ்டின் (தூத்துக்குடி), ராதாகிருஷ்ணன் (ஸ்ரீவைகுண்டம்), திம்மராஜபுரம் பஞ்சாயத்து தலைவர் சித்திரைசெல்வன், உதவி பொறியாளர்கள் (ஊரக வளர்ச்சி முகமை) தளவாய், செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜன் செல்வி, பாக்கியலீலா உள்பட பலர் உடன் சென்றனர்.