பேரணாம்பட்டு பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
பேரணாம்பட்டு பகுதியில் நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.;
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு பகுதியில் நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
மணல் கொள்ளை
பேரணாம்பட்டு தாலுகா விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தாசில்தார் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்துகொண்டு பேசினர்.
அப்போது பேரணாம்பட்டு அருகே உள்ள பத்தலப்பல்லி, மசிகம், குண்டலப் பல்லி, ரெட்டி மாங்குப்பம், அழிஞ்சிக்குப்பம் ஆகிய இடங்களில் உள்ள ஆறுகளில் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது, ஆற்றில் சுமார் 25 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி மணல் திருடி வருகின்றனர். மணல் கொள்ளையர்கள் மீது புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும்
உரத்தட்டுப்பாடு உள்ளது, போதிய உரம் இருப்பு இல்லை என கூறுகின்றனர். அருகிலுள்ள ஆந்திரா மாநிலத்திற்கு சென்று உரம் வாங்க வேண்டிய நிலை உள்ளது. ஆம்பூர், திருப்பத்தூர் சர்க்கரை ஆலைகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டன இதில் திருப்பத்தூர் சர்க்கரை ஆலை கடந்த 3 மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் ஆம்பூர் சர்க்கரை ஆலை திறக்கப்படாததால் நடப்பு பருவ கரும்பை திருப்பத்தூர் சர்க்கரை ஆலைக்கு அதிக பணம் செலவழித்து லாரிகள் மூலம் அனுப்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே ஆம்பூர் சர்க்கரை ஆலையை உடனடியாக திறக்க வேண்டும்.
நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட வில்லை. மின் தடை அதிகமாக உள்ளது. இதனால் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் உள்ளது. மசிகம் கிராமத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக சாராயம் காய்ச்சி விற்கப்பட்டு வருவதால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. இது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சாராயம் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.