தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் உற்பத்தி, விற்பனையை பெருக்குவேன்- புதிதாக பதவியேற்ற தலைவர் சுரேஷ்குமார் பேட்டி
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின்பால் உற்பத்தி மற்றும் விற்பனையை பெருக்குவேன் என புதிதாக பதவியேற்றுள்ள ஆவின் தலைவர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின்பால் உற்பத்தி மற்றும் விற்பனையை பெருக்குவேன் என புதிதாக பதவியேற்றுள்ள ஆவின் தலைவர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவராக சாத்தான்குளத்தை சேர்ந்த சுரேஷ்குமார் நேற்று முன்தினம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர் ஆவின் மாவட்ட அலுவலகத்தில் தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் நல்லாட்சிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள மாநகரம், நகரம் மற்றும் கிராமங்களிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் ஆவின் பால் கிடைக்கும் வகையில் ஆவின் பால் உற்பத்தியை பெருக்குவேன்.
அதேபோல், மாவட்டம் முழுவதும் ஆவின் பால் மற்றும் ஆவின் உபபொருட்கள் மக்களுக்கு தங்கு தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பால் உற்பத்தியாளர்களுக்கு, பாலுக்குரிய பணத்தை உடனுக்குடன் வழங்கி அதன் மூலம் பால் கொள்முதல் மற்றும் விற்பனையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்துகொண்டவர்கள்
நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட ஆவின் பொது மேலாளர் அமரவாணி, இணை பொது மேலாளர் ரங்கநாதன் துரை, துணை பதிவாளர் நவராஜ், ஆவின் துணை தலைவர் பாலமுருகன், ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், ஒன்றிய செயலாளர்கள் ஜோசப், பாலமுருகன், நடுவக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் வேல்துரை, முதலூர் பஞ்சாயத்து தலைவர் பொன்முருகேசன், வரண்டியவேல் பஞ்சாயத்து துணை தலைவர் அருண் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.