காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் மீட்பு

முகநூல் காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் மீட்கப்பட்டார். தோழியுடன் செல்போனில் பேசியதால் 8 மாதங்களுக்கு பிறகு போலீசாரிடம் சிக்கினார்.

Update: 2022-04-09 16:26 GMT
சின்னாளப்பட்டி:
முகநூல் காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் மீட்கப்பட்டார். தோழியுடன் செல்போனில் பேசியதால் 8 மாதங்களுக்கு பிறகு போலீசாரிடம் சிக்கினார்.
இளம்பெண் மாயம்
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள செட்டியப்பட்டி நண்பர்கள்புரத்தை சேர்ந்தவர் பாண்டி. கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி அமராவதி. இந்த தம்பதியின் மகள் தேன்மொழி (வயது 20). பிளஸ்-2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார்.
இந்தநிலையில் கடந்த 12.7.2021 அன்று தேன்மொழி திடீரென மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுதொடர்பாக அம்பாத்துரை போலீஸ் நிலையத்தில் பாண்டி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேன்மொழியை தேடிவந்தனர். ஆனால் கடந்த 8 மாதங்களாக இந்த வழக்கில் துப்புத்துலங்காமல் மர்மம் நீடித்தது.
தோழியுடன் செல்போனில் பேச்சு
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செட்டியப்பட்டியில் உள்ள தனது தோழியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தேன்மொழி பேசினார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், தேன்மொழி பேசிய செல்போன் எண்ணை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி விசாரணையை முடுக்கி விட்டனர்.
அந்த செல்போனின் செயல்பாட்டை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது விழுப்புரம் அருகே உள்ள ஆனந்தபுரம் பகுதியில் இருந்து அந்த செல்போன் பயன்படுத்தி வருவது தெரியவந்தது. இதனையடுத்து அம்பாத்துரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், போலீஸ் ஏட்டு ராஜேஸ்வரி ஆகியோர் விழுப்புரத்துக்கு விரைந்தனர்.
8 மாதங்களுக்கு பிறகு மீட்பு
 விழுப்புரம் அனந்தபுரத்தில் தேன்மொழி தங்கியிருந்த வீட்டுக்கு போலீசார் சென்றனர். அங்கு அவர், சிராஜூதீன் (22) என்ற வாலிபருடன் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. அங்கிருந்து தேன்மொழியை போலீசார் மீட்டனர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தேன்மொழிக்கும், ஆனந்தபுரத்தை சேர்ந்த சிராஜூதீனுக்கும் (22) முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மலர்ந்தது தெரியவந்தது.
காதலர்கள் 2 பேரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று கருதி தேன்மொழி வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் சென்றார். பின்னர் தனது காதலரை திருமணம் செய்து, விழுப்புரத்தில் சிராஜூதீனுடன் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.
பெற்றோர் மகிழ்ச்சி
இதற்கிடையே தேன்மொழியை நேற்று அம்பாத்துரை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். இதனையடுத்து அவருடைய பெற்றோரும் அங்கு வந்தனர்.
கடந்த 8 மாதங்களாக தனது மகள் பற்றிய ஏக்கத்தில் இருந்த பெற்றோர், தேன்மொழியை பார்த்ததும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் காதல் கணவருடன் சேர்ந்து வாழட்டும் என்று தேன்மொழியின் பெற்றோர் சிராஜூதீனுடன் அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்